கின்னஸ் சாதனை முயற்சியில் ஆற்காடு வாலிபர்-60 அடி உயர மின் கம்பத்தில் தலைகீழாக ஏறி சாதனை

*கலக்கல் கார்னர்

ஆற்காடு :  ஆற்காட்டை சேர்ந்த 30 வயது வாலிபர் 60 அடி உயர மின்கம்பத்தில் தலைகீழாக ஏறி பார்ப்பவர்களை வியக்க வைக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தண்டுக்காரன் தெருவைச் சேர்ந்தவர்கள் லோகன், பத்மாவதி, தம்பதி. இவரது மகன் அருண் (30). இவருக்கு திருமணமாகி சுகன்யா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலையால் 10ம் வகுப்பு மட்டுமே படித்துமுடித்து கார் டிரைவராக உள்ளார்.

இவருக்கு சிறுவயது முதலே ஏதாவது ஒரு சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் பள்ளிக்குச் செல்லும் போது உடன் படிக்கும் மாணவர்கள் நேராக நடந்து செல்லும்போது இவர் மட்டும் தலைகீழாக நடந்து செல்வாராம். சிறிய வயதிலேயே மரங்களில் தலைகீழாக ஏறும் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். பலமுறை கீழே விழுந்து காயம் அடைந்தும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி எடுத்துள்ளார்.

இந்த பயிற்சியின் பலனாக 60 அடி உயரம் கொண்ட தென்னை மற்றும் பனைமரங்களில் தலைகீழாக ஏறி தனது முதல் சாதனையை நிறைவேற்றினார். அதோடு நின்று விடாமல் தொடர்ந்து சாதனை படைக்க முடிவு செய்தார். பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே மின்கம்பத்தில் நேராக ஏறிச் செல்ல முடியும்.

பயிற்சி இல்லாதவர்கள் ஏற முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் மின்கம்பத்தை தலைகீழாக ஏறி பார்த்தால் என்ன என்று அருண் நினைத்தார். அதனைத் தொடர்ந்து கடும் முயற்சி எடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய மின் கம்பத்தில் தலைகீழாக ஏறி பயிற்சி எடுத்தார்.

தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது தலைமுடியில் 10 கிலோ எடை கொண்ட இரும்பு வளையத்தை கட்டி கொண்டு மின் கம்பத்தில் தலைகீழாக ஏறி, இறங்கி சாதனை படைத்துள்ளார். அதேபோல் 14.5 கிலோ எடைகொண்ட காலி கேஸ் சிலிண்டரை தலைமுடியில் கட்டிக்கொண்டு மின் கம்பத்தில் தலைகீழாக ஏறி இறங்கி பயிற்சி எடுத்துள்ளார்.

கடும் பயிற்சி மற்றும் முயற்சியின் காரணமாக தற்போது 40 அடி உயர மின்கம்பத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் தலைகீழாக ஏறி இறங்குகிறார்.தற்போது 60 அடி உயரம் உள்ள மின் கம்பத்தில் தலைகீழாக ஏறி இறங்கும் பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டு வருகிறார். சாதனை புத்தகத்தில் தனது பெயர் இடம்பெறும் என்று வாலிபர் அருண் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

இதுகுறித்து வாலிபர் அருண் கூறியதாவது: பற்களால் லாரி, பஸ்கள் இழுப்பது, தலை முடியால் கார், வேன்களை இழுப்பது போன்ற சாதனைகளை பார்க்கும் போது நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனவே மரத்தை தலைகீழாக ஏறி பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். முதலில் தலை பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது.

தொடர்ந்து பயிற்சி எடுத்ததால் வலி தெரியவில்லை. கை தவறி கீழே விழும் போதும் எனது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்னை ஊக்குவித்தனர். பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து என்னை ஊக்கப்படுத்தினர். எனவேதான் தொடர்ந்து பயிற்சி எடுக்க முடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக உயரம் அதிகமாக உள்ள கம்பங்களில் தலைகீழாக ஏறி பயிற்சி எடுத்தேன். இப்போது 60 அடி உயரமுள்ள மின்கம்பத்தில் ஏறி, இறங்கும் அளவிற்கு பயிற்சி பெற்றுள்ளேன். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் வேகமாக தலைகீழாக ஏறி அதே வேகத்தில் கீழே இறங்கும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். மேலும் 100 அடி உயரம் கொண்ட மின்கம்பத்தை தலைகீழாக ஏறி இறங்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

தொடர்ந்து பயிற்சி எடுத்து சாதனை படைப்பேன். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மேலும் 14.5 கிலோ எடையுள்ள காலி சிலிண்டரை தலைமுடியில் கட்டிக்கொண்டு 35 அடி உயரம் கொண்ட உருளை இரும்பு பைப்பில் ஏறி இறங்கினேன். அப்போது அனைவரும் என்னை பாராட்டியது பெருமையாக இருந்தது. அதேபோல் மலேசியா தனியார் தொலைக்காட்சி சார்பில் ஆற்காடு வந்திருந்து, மின் கம்பத்தில் நான் தலைகீழாக ஏறி இறங்குவதை படம் பிடித்துச் சென்றனர்.

மேலும் மலேசியாவில் மேற்கண்ட நிகழ்ச்சியை செய்ய எனக்கு அழைப்பு வந்தது. கொரோனா பாதிப்பு நிலவி வருவதால் வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. விரைவில் வெளிநாட்டிலும் இச்சாதனையை படைப்பேன். அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் எனக்கு உதவி செய்தால் மேலும் பல சாதனைகளை செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன். இவ்வாறு கூறினார்.

Related Stories: