தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல், மேட்டூரில் திரண்ட சுற்றுலா பயணிகள்-50 ஆயிரம் பேர் குவிந்தனர்

பென்னாகரம் : புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி, ஒகேனக்கல் மற்றும் மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு பிறப்பு களை கட்டும். முக்கிய சுற்றுலா தலங்கள், நட்சத்திர ஓட்டல்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்தது. தமிழகத்தின் உள்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களான ஏற்காடு, கொல்லிமலை உள்ளிட்ட இடங்களும் புத்தாண்டு தினத்தில் மூடப்பட்டன.

ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் புத்தாண்டு தினத்தின்போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அன்றைய தினம் சுமார் 20 ஆயிரம் பேர் ஒகேனக்கல்லில் குவிந்தனர். தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறையையொட்டி, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து படிப்படியாக அதிகரித்தது.

நேற்று காலை முதலே, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டைய மாவட்டங்களான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் கார், வேன், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் சாரை சாரையாக வந்து மக்கள் குவிந்தனர்.

அதேபோல், அண்டைய மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்தும் கனரக வாகனங்களில் சுற்றுலா வந்தனர். அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்தோடு பரிசல்  சவாரி செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். தொங்கு பாலம், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாலம் மற்றும் பரிசல் துறைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரம் காத்திருந்து பரிசல் பயணம் மேற்கொண்டதை காண முடிந்தது.

 இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூரிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி அண்டைய மாவட்டமான ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த மக்கள், காவிரியில் புனித நீராடி அணை முனியப்பனை வழிபட்டனர். அப்போது, ஆடு-கோழிகளை பலியிட்டு வேண்டுதல் நிறைவேற்றினர். பின்னர், ஆடு- கோழிகளை சமைத்து, உறவினர்களுக்கு அசைவ விருந்து படைத்தனர்.

இதையடுத்து, அருகிலுள்ள அணை பூங்காவிற்கு சென்று பொழுது போக்கினர். நேற்று ஒரேநாளில் ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அணை பூங்காவில் ஒரேநாளில் ₹27,035 வசூல்

மேட்டூர் அணை பூங்காவிற்கு நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்தது. மாலை வரை, மொத்தம் 4197 பேர் அணை பூங்காவில் குவிந்தனர். இதன்மூலம் நுழைவுக்கட்டணமாக ₹20,985 வசூலானது. மேலும், மேட்டூர் அணையின் பவளவிழா கோபுரத்தை சுற்றிப்பார்க்கவும் திரளானோர் குவிந்தனர். படிக்கட்டு வழியாக 426 பேர் ஏறி சுற்றிப்பார்த்தனர்.

இதன் மூலம் ₹2130ம், லிப்ட் வழியாக சென்று 196 பேர் பவளவிழா கோபுரத்தை பார்த்ததில் ₹3920ம் வசூலானது. ஆக மொத்தம் நேற்று ஒரேநாளில் மேட்டூர் அணை மற்றும் பவளவிழா கோபுரத்தை சுற்றிப்பார்த்தவர்கள் மூலம் ₹27,035 வசூலானதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: