பள்ளிகள் திறக்கவில்லை; பாடங்களும் நடத்தவில்லை பொதுத்தேர்வுகளை நடத்துவது எப்படி சாத்தியம்? கேள்வி எழுப்பும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள்; புதிய கொரோனா பரவுவதால் பெற்றோர் அச்சம்

நடப்பு ஆண்டில், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை விரைவில் வெளியிடுவோம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிகள் பத்து மாதங்களுக்கும் மேலாக திறக்கப்படவில்லை. ஆன்லைன் கல்வியும் முழுமையாக நடைபெறவில்லை. தனியார் பள்ளிகள் மட்டுமே ஆன்லைனில் பாடங்களை நடத்துகின்றன. செல்போன், இணையதள வசதி இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் பல மாணவர்கள் ஆன்லைன் பாடங்களை தவற விட்டு வருகின்றனர்.

அரசு பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தவில்லை. பாடங்களை சரிவர நடத்தாமல் பொதுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாடத்திட்டத்தை குறைக்கப்போவதாக அரசு அறிவித்து, இதற்காக குழு அமைத்தது. குழுவும் அறிக்கை தாக்கல் செய்துவிட்டது. ஆனால் இன்னும் இதுகுறித்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை பாடத்திட்டத்தை 40 சதவீத அளவுக்கு குறைப்போம்; 50 சதவீதம் குறைப்போம் என ஊருக்கு ஊர் ஒவ்வொரு மாதிரியாக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார். இடையில் பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிக்கப்படும் எனவும் அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த சில நாளிலேயே பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அறிவிக்கவும் செய்தார்.

பள்ளி கல்வி குறித்த விஷயத்தில் தொடர்ந்து குழப்படியான அறிவிப்பை செய்துகொண்டிருப்பதை போலவே, மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய முக்கிய பிரச்னையான பொதுத்தேர்வு விஷயத்திலும் அமைச்சர் செங்கோட்டையன் நடந்துகொண்டு வருகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. தேர்தல் நேரத்தில் இது பின்னடைவை ஏற்படுத்தும் என மூத்த அமைச்சர்களும் செங்கோட்டையனின் செயல்பாடுகள் மீது அதிருப்தி கொண்டுள்ளனர். பள்ளிகள் திறக்கப்படாமலும் பாடங்கள் நடத்தப்படாமலும் பொதுத்தேர்வை நடத்துவது எப்படி சாத்தியம் என சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் கேள்வி எழுப்புகின்றனர். உருமாறிய கொரோனா பரவி வரும் இச்சூழலில் பொதுத்தேர்வை நடத்துவதா என பெற்றோர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இத்துறை சார்ந்து நான்கு பேர் இங்கு அலசுகின்றனர்.

Related Stories: