சேரன்மகாதேவி அருகே கோவிந்தப்பேரியில் நாளை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு விழா: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் கட்டப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனுக்கு நாளை மணிமண்டபம் திறக்கப்படுகிறது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் திறந்து வைக்கின்றனர். 1972ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுக தொடங்கியதிலிருந்து அக் கட்சியில் பணியாற்றிய பி.எச். பாண்டியன், 1977, 1980, 1984, 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் எம்எல்ஏவாகவும், 1999 நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ல் துணை சபாநாயகராகவும், 1984ல் சபாநாயகராகவும் பதவி வகித்து திறமையாக செயலாற்றினார்.

கடந்த ஆண்டு மறைந்த பி.எச். பாண்டியனுக்கு, அவரது சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் 25 சென்ட் நிலத்தில் கண்ணைக் கவரும் வகையில் அழகிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் சபாநாயகர் இருக்கையில் பி.எச். பாண்டியன் அமர்ந்திருப்பது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத்தை சுற்றி புல்வெளியுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பி.எச்.பாண்டியனின் முதலாவது ஆண்டு நினைவு தினமான நாளை (திங்கள்) 4ம் தேதி பிற்பகலில் இந்த மணிமண்டப திறப்பு விழா நடக்கிறது. விழாவுக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தலைமை வகிக்கிறார்.

துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் ராஜலட்சுமி, அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமிபாண்டியன், முருகையாபாண்டியன் எம்எல்ஏ, நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அதிமுக அமைப்புச் செயலாளரும், வழிகாட்டுக்குழு உறுப்பினருமான பி.எச். மனோஜ்பாண்டியன் வரவேற்று பேசுகிறார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பி.எச். பாண்டியன் மணிமண்டபத்தையும், சிலையையும் திறந்து வைக்கின்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். டாக்டர் நவீன்பாண்டியன் நன்றி கூறுகிறார். விழா ஏற்பாடுகளை அதிமுக அமைப்பு செயலாளர் பி.எச்.மனோஜ்பாண்டியன், அட்வகேட் ஜெனரல் பி.எச். அரவிந்த்பாண்டியன், டாக்டர்கள் பி.எச். நவீன்பாண்டியன், பி.எச். தேவமணி பாண்டியன், வக்கீல் பி.எச். வினோத்பாண்டியன் ஆகியோர் செய்துள்ளனர்.

1500 போலீசார் பாதுகாப்பு

முதல்வர் வருகையை முன்னிட்டு 17 டிஎஸ்பிக்கள், 40 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்கள், போலீசார் உள்ளிட்ட 1500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை எஸ்.பி. மணிவண்ணன் பார்வையிட்டார். முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும், பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும் தனித்தனியாக போதிய இடவசதி செய்யப்பட்டுள்ளது. மணிமண்டபத்தை பொதுமக்கள் சுற்றிப் பார்வையிட வசதியாக தடுப்பு கம்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: