‘சொந்த வீடு வேண்டாம்’ என்ற சபதத்தால் வரிசையாக வீடுகளை விற்று தள்ளும் மஸ்க்: சொன்னதை செய்யும் உலகின் 2வது பணக்காரர்

லாஸ்  ஏஞ்செல்ஸ்: ‘சொந்தமாக வீடு வைத்துக் கொள்ள மாட்டேன்’ என்று கடந்தாண்டு மே மாதம் எடுத்த சபதத்தை நிறைவேற்றும் விதமாக, உலகின் 2வது பணக்காரரான எலான் மஸ்க் தனது வீடுகளை விற்றுத் தள்ளி வருகிறார்.

உலகளவில் புகழ் பெற்ற ‘டெஸ்லா’ கார் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்.  ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை உருவாக்கி, விண்ணுக்கு சொந்தமாக ராக்கெட்டுகளை அனுப்பி வருகிறார். இன்றைய நிலையில் உலகின் 2வது மிகப்பெரிய பணக்காரர் இவர்தான். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 12.21 லட்சம் கோடி. இவர் சற்று வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர். அதிரடியான முடிவுகளை எடுப்பதிலும், வித்தியாசமான சபதங்களை எடுப்பதிலும் பெயர் போனவர். இவர் விண்ணில் ஏவிய தனது நிறுவனத்துக்கு சொந்தமான ‘பால்கன் ஹெவி’ பரிசோதனை ராக்கெட்டில் கூட, தனது டெஸ்லா  நிறுவனத்தின் சிகப்பு நிற ரோட்ஸ்டெர் காரை வைத்து அனுப்பினார். அதன் ஓட்டுனர்  இருக்கையில் ஸ்டார்மேன் என்ற பொம்மை உட்கார வைக்கப்பட்டு இருந்தது.

இவர் கடந்தாண்டு மே மாதம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் ‘எனக்கு சொந்தமாக வீடு வேண்டாம்’ என்ற கொள்கையை எடுத்து இருப்பதாக அறிவித்தார். இதற்காக, தன்னிடம் உள்ள அனைத்து நிலங்களையும், வீடுகளையும் விற்கப் போவதாக அறிவித்தார். அதோடு நில்லாமல், அதை நிறைவேற்றும் செயலிலும் இறங்கி விட்டார்.  கடந்தாண்டு ஜூனில், பெல் ஏர் பகுதியில்  இருந்த தனது வீட்டை சீன கோடீஸ்வரருக்கு 29 மில்லியன் டாலருக்கு விற்றார். கடந்தாண்டு அக்டோபரில் தனது எஸ்டேட்டை ஹாலிவுட் நடிகர் ஜெனி வில்டருக்கு விற்றார்.  கடந்த மாத தொடக்கத்தில்தான் அமெரிக்காவின் டெக்சாசுக்கு சென்று குடியிருக்க போவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸ் அருகே பெல்ஏர் பகுதியில் இருந்த தனது 3 வீடுகளையும் 40.9 மில்லியன் டாலருக்கு அவர் விற்பனை செய்துள்ளார். அவருடைய  இந்த செயல், உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: