மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி

புதுடெல்லி: ‘இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம்’ என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இதை இந்தியாவில் அவசர கால தேவைக்கு பயன்படுத்தலாம் என மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு நேற்று முன்தினம் பரிந்துரை செய்தது. தற்போது, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதிக்காக இது காத்திருக்கிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட் விநியோகம் செய்ய உள்ளது. நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட தடுப்பூசி ஒத்திகையில் இந்த தடுப்பூசியே பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவிலும், ‘கோவாக்சின்’ என்ற கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுவும் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கிறது. ஐதராபாத்தை சேர்ந்த ‘பாரத் பயோடெக்’ நிறுவனமும், இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) இணைந்து, இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளன.  இந்நிலையில், ‘இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம்’ என மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு நேற்று பரிந்துரை செய்தது. இந்த அனுமதியை கேட்டு கடந்த மாதம் 7ம் தேதி, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. அதன் அடிப்படையில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

பாஜ தடுப்பூசியை போட்டுக் கொள்ள மாட்டேன்

சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் வெளியிடப்படும் தடுப்பூசி, ‘பாஜ.வின் தடுப்பூசி’. இதை நம்ப மாட்டேன். இதை போட்டுக் கொள்ளவும் மாட்டேன்,’’ என்றார். இது, பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. உபி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா இதை கடுமையாக கண்டித்துள்ளார். ‘‘நமது டாக்டர்களையும், விஞ்ஞானிகளையும் அகிலேஷ் அவமதித்துள்ளார். இதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: