டாஸ்மாக் விற்பனை பணம் செலுத்துவதில் தாமதம்: துறைரீதியான அபராத தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிப்பது சட்டவிரோதம்: நோட்டீஸை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை:  டாஸ்மாக் விற்பனை பணத்தை தாமதமாக செலுத்தியதற்கு வட்டியும், ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டுமென்ற நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது.  மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த அழகர்சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக உள்ளேன். மது விற்பனை பணத்தை மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம். கொரோனா பரவலால் மார்ச் 24ல் மாலை 6 மணிக்கு கடை மூடப்பட்டது. அப்போது, மாலை 4 மணி வரையிலான விற்பனை பணம் மறுநாள் வங்கியில் செலுத்தப்பட்டது. மாலை 4 முதல் 6 மணி வரை நடந்த விற்பனை பணம் பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டது. மறுநாள் கடையில் இருந்த மதுபானங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. அப்போது மதுபான இருப்பு சரிபார்க்கப்பட்டு 4 மணி முதல் 6 மணி வரையிலான பணம் வங்கியில் செலுத்தப்பட்டது. இந்த நடைமுறை தான் அனைத்து மதுபான கடைகளிலும் பின்பற்றப்பட்டது.

 இந்நிலையில், மாலை 4 முதல் 6 மணி வரையிலான விற்பனை பணத்தை தாமதமாக செலுத்தியதற்கு அபராதம், 24 சதவீத வட்டி, 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டுமென நோட்டீஸ் ெகாடுக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதத் தொகையில் 50 சதவீதத்தை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல் மதுரை, நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 61 பேர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து பிறப்பித்த உத்தரவு:  வர்த்தகம், வரி தொடர்பான அபராதத் தொகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்க முடியும். துறைரீதியான அபராதத் தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிப்பது சட்டவிரோதம். நோட்டீஸ்கள் ரத்து செய்யப்படுகிறது இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: