காரைக்குடியில் குப்பை உரம் ‘கட்’ -கண்டுகொள்வாரா கலெக்டர்

காரைக்குடி: காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். 26,745 குடியிருப்புகளும், 2,429 வணிகநிறுவனங்களும் உள்ளன. தினமும் 48 டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. மொத்தம் உள்ள 13.75 ஏக்கர் பரப்பில் 6 ஏக்கரில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. கடந்த 42 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் கன மீட்டர் அதாவது 72 ஆயிரம் டன் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இந்த குப்பையை தரம் பிரித்து முழுமையாக அகற்ற வேண்டும் என்பதற்காக தூய்மை பாரத இயக்க திட்ட நிதியில் இருந்து ரூ.7 கோடியே 37 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

குப்பையை சலித்து அதிலிருந்து பிளாஸ்டிக், ரப்பர், துணி, மரம், பெட் பாட்டில், கண்ணாடி துகள்கள், நைஸ் மண், கல், மண் என 7 உப பொருட்களை பிரிப்பார்கள்.  இதில் நைஸ் மண்ணை இயற்கை உரமாக விவசாயிகளுக்கு வழங்குவார்கள். கல், மண்ணை பள்ளம் உள்ள பகுதியில் போட்டு விடுவார்கள். பிளாஸ்டிக் பொருட்களை சிமென்ட், பவர் பிளான்ட்டுக்கு அனுப்புவார்கள்.

அதேபோல் சேகரிக்கப்படும் குப்பைகள் கழனிவாசல், சேர்வார்ஊரணி, கணேசபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நவீன உரக்கிடங்குகளில் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் சிமெண்ட், பவர்பிளான்ட் நிறுவனங்களுக்கு அனுப்படுகிறது. இயற்கை குப்பை உரம் உள்ளூர் விவசாயிகளுக்கு ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

விவசாயிகள் கூறுகையில், இயற்கை குப்பை உரம் மிகவும் நல்ல பலன் தந்தது.  ஒரு கிலோ இயற்கை உரம் ரூ.10க்கு ரஸ்தா குப்பை கிடங்கில் விற்பனை செய்தனர். ஆனால் தற்போது இதனை வெளிமாநிலத்துக்கு அனுப்புவதாக கூறி எங்களுக்கு தர மறுக்கின்றனர். உள்ளூர் விவசாயிகளை புறக்கணித்து விட்டு வெளிமாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்புவது கண்டிக்கதக்கது. இதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.

Related Stories: