4 ஆண்டாகியும் 6 பேருந்துகள் மட்டுமே இயக்கம்; பெயரளவில் செயல்படும் சாத்தான்குளம் அரசு பணிமனை: கூடுதல் பேருந்து சேவை கானல் நீரானது

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை தொடங்கி  4 ஆண்டுகளாகியும் இதுவரை 6 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.  கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட அரசு பஸ்களை உடனடியாக இயக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சாத்தான்குளம்  தாலு கா தலைமையிடத்தில் போக்குவரத்துகழக பணிமனை இல்லாமல் இருந்தது.  இதையடுத்து பொதுமக்கள் வலியுறுத்தியதன் பேரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  போக்குவரத்து பணிமனை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி இப்பகுதியைச் சேர்ந்த  விவசாயிகள் சாத்தான்குளம் - நாசரேத் செல்லும் சாலையில் உள்ள நிலத்தை தானமாக  வழங்கினர்.

அதன்படி ரூ1.10 கோடி மதிப்பில் பணிமனை அமைக்கப்பட்டு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். அப்போது  திசையன்விளை, நெல்லை போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து 3 பேருந்துகள்  இப்பணிமனைக்கு மாற்றப்பட்டு இயக்கப்பட்டது. அதன்பின் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் உள்ள டவுன் பேருந்துகள் இப்பணிமனைக்கு  மாற்றப்பட்டது. அதன்படி இதுவரை 6 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது டவுன் பஸ்கள் கொரோனா தடுப்பு பணிக்கு பிறகும் இன்னும்  இயக்கப்படாமல் உள்ளது. பணிமனை தொடங்கப்பட்டதும் தூத்துக்குடி, மதுரை, கோவை,  திருச்சி, தஞ்சாவூர் பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும்,  குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும்  உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை 6 பஸ்கள் மட்டுமே  இயக்கப்பட்டு வருகிறது. இப்பணிமனையில் இருந்து தொலை தூர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும் வெறும் கானல் நீராகவே உள்ளது. பணிமனை  தொடங்கப்பட்ட போது இப்பணிமனையில் இருந்து பஸ்களுக்கு டீசல் நிரப்பி வந்தனர். கடந்த 2ஆண்டுகளாக வேறு பணிமனையில் பஸ்களுக்கு டீசல் நிரப்ப்பட்டு வருகிறது. இதற்கிடையே இப்பணிமனை மாற்றப்பட்டு பஸ்கள் தொடர்பான அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து சர்வ கட்சியினர் போராட்டம் நடத்தினர். எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏவிடம்  புகார் தெரிவிக்கப்பட்டது,

உடன் எம்எல்ஏ, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி பணிமனை மாற்றப்படாது, தொடர்ந்து  சாத்தான்குளத்திலேயே இயங்கும் என தெரிவித்தார். அதன்பின் எந்தவித மாற்றமும்  இல்லாமல் பழைய நிலையிலேயே தொடர்கிறது. இருப்பினும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாத நிலை நீடிக்கிறது. சாத்தான்குளம் பணிமனையில் இருந்து உரிய பஸ்கள் இயக்கப்படாததால் பிற பகுதிகளில் இருந்து பணிமாறுதலாகி வரும் பணியாளர்கள் இங்கு பணியாற்ற தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. உரிய பணியாளர்கள் இருந்தும் பஸ்கள் இல்லாததால் இங்குள்ள டிரைவர், கண்டக்டர்களை வேறு பணிமனையில் உள்ள பஸ்களை இயக்க அனுப்புவதாக பணியாளர்கள் புகார் கூறுகின்றனர்.

எனவே, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக சாத்தான்குளம் பணிமனைக்கு கூடுதலாக பஸ்கள் ஒதுக்கி இப்பகுதியில் இருந்து அனைத்து பகுதிக்கும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சாத்தான்குளம் பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  

விளக்கு கூட இல்லை

சாத்தான்குளம் - நாசரேத்  செல்லும் சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் பணிமனை அமைக்கப்பட்டு  சாலை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பணிமனையில் இருந்து மெயின்  சாலை வரை விளக்குகள் அமைக்கப்படவில்லை.  இதனால் இரவில் பணிமனை பணியாளர்கள்  அச்சமடையும் நிலை உள்ளது. பணிமனையில் பணியாளர்களுக்கு குடிநீர் வசதியும்  ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. எனவே பணிமனையில் இருந்து பிரதான சாலை வரை  தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். குடிநீர் வசதியும் செய்து கொடுக்க  வேண்டும் என பணியாளர்கள் விரும்புகின்றனர்.

Related Stories: