உற்பத்தி இருந்தும் இடைத்தரகர்களால் பாதிப்பு; கயத்தாரில் பாய் கொள்முதல் நிலையம் அமையுமா?.. வாடிவதங்கும் தொழிலாளர்கள்

கயத்தாறு: பாய் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற கயத்தாரில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் பாரம்பரிய பாய் உற்பத்தியில் நெல்லை மாவட்டம், பத்தமடைக்கு   அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சிறந்து விளங்குகிறது. இங்கு 100 வருடங்களுக்கும் மேலாக பாய் உற்பத்தி நடந்து வருகிறது. கயத்தாறு அருகிலுள்ள மானங்காத்தான், அய்யனாரூத்து போன்ற ஊர்களிலும் பாய் உற்பத்தியே பிரதான தொழிலாகும். ஒரு நூற்றாண்டு காலமாக கைத்தறி மூலமாகவே  பாய் தயாரித்து வந்த நிலையில் கடந்த 40 வருடங்களாக இயந்திரம் மூலம் உற்பத்தி நடக்கிறது.

கயத்தாறு பகுதியில் இயங்கும் 40 தொழிற்சாலைகளை நம்பி சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளன. பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக உள்ள இத்தொழில் சமீப காலமாக நலிவடையும் நிலையில் உள்ளது.

பாய் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான கோரை புல், கரூர் மாவட்டத்தின் காவிரி கரையோரப் பகுதிகளான நெரூர், சேனப்பாடி, முனியப்பனூர், மறவாபாளையம், புதுப்பாளையம், அரங்கநாதன்பேட்டை, அச்சமாபுரம், சோமூர் என சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு அங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் அதிகளவில் கோரை உற்பத்தி செய்யப்பட்டாலும், இடைத்தரகர்கள் காரணமாக விலை கிடைக்காமல் கோரை விவசாயிகளும், விலை உயர்வால் பாய் உற்பத்தியாளர்களும் தடுமாறி வருகின்றனர்.

உற்பதியாளர்கள் 160 கட்டுகள் கொண்ட ஒரு லோடு கோரையை கொள்முதல் செய்ய இடைத்தரகர்களுக்கு வண்டி வாடகையுடன் சேர்த்து ரூ.1.85 லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதில் இடைத்தரகர்களே கொளுத்த லாபம் அடைகின்றனர்.   மழைக் காலங்களில் விலை குறைவாக இருந்தாலும் கோடை காலங்களில் இடைத்தரகர்களால் பதுக்கப்பட்டு இருமடங்காக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பாய் விலையையும்  உயர்த்த வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்பட்ட பாய் தற்போது அதிக வரி விதிப்பின் காரணமாக உள்நாட்டிலேயே விற்கப்படுகிறது.

இப்படி நலிந்துவரும் பாய் உற்பத்தி தொழிலை சீர் செய்ய என்ன வழி என்று சில பாய் உற்பத்தியாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது: கடந்த காலங்களில் 24 மணி நேரமும் பாய் உற்பத்தி நடைபெற்ற நிலையில் தற்போது 8 மணி நேரமே உற்பத்தி நடக்கிறது. இதில் பணிச்சுமை அதிகம், லாபம் குறைவு. கடந்த காலங்களில் இருந்த வியாபாரம் தற்போது இல்லை. ஒரு இயந்திரத்தில் இரண்டு பேர் வேலை பார்த்த நிலை மாறி தற்போது ஒருவர் மட்டுமே பணிபுரிகிறார். மழைக்காலங்களில் சாயம் ஏற்றப்படும் கோரைகளை வெயிலில் காயவைக்க முடியாது. அந்த காலகட்டத்தில் உற்பத்தி சுத்தமாக இருக்காது. கொரோனா ஊரடங்கிலும் இதே நிலை.  

ஊரடங்கிற்கு முன்பு விற்பனைக்கு வாங்கிச் சென்ற பாய்களுக்கு வியாபாரிகளிடமிருந்து இன்னும் பணம் வரவில்லை.

கயத்தாறு சுற்று  வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் இத்தொழிலை நம்பியே  உள்ளனர். இத்தொழிலில் ஈடுபடும் எங்களை காக்கவும்  இதனை நம்பியே வாழும் மக்களை  காக்கவும் தமிழக அரசு நேரிடையாக தலையிட்டு  கோரை உற்பத்தி செய்யப்படும்  காவிரி ஆற்று பகுதிகளான கரூர், வேலூர்,  பேட்டைவாய்த்தலை ஆகிய இடங்களில்  கொள்முதல் நிலையம் அமைத்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அவற்றை ஏலம் விட்டு விவசாயிகளுக்கு லாபம்  கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  அதன்மூலம் எங்களுக்கும் குறைந்த விலையில் கோரைகள் கிடைத்து பாய் உற்பத்தி  செய்து கொடுக்க முடியும்.

அதே போன்று  கயத்தாறில் உற்பத்தி செய்யப்படும்  பாய்களை அரசே கொள்முதல் செய்ய நிலையம்  அமைக்க வேண்டும். அப்படி செய்தால்  உற்பத்தியாளர்களுக்கு நேரடி லாபம்  கிடைக்கும். தமிழக அரசு பாய்  உற்பத்தியில் ஈடுபடும்  உற்பத்தியாளர்களுக்கு மானியம் அறிவிக்கவேண்டும்.  தற்போது எங்களுக்கு 5  சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதனை  குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் நெசவாளர்களை போன்று  பாய்  உற்பத்தியாளர்களும் மாற்றுத் தொழிலுக்கு செல்லும் அவல நிலைக்கு விரைவில் தள்ளப்படுவர்’ என்றனர்.

இடைத்தரகர்கள் காரணமாக விலை கிடைக்காமல் கோரை விவசாயிகளும், விலை உயர்வால் பாய் உற்பத்தியாளர்களும் தடுமாறி வருகின்றனர். உற்பதியாளர்கள் 160 கட்டுகள் கொண்ட ஒரு லோடு கோரையை கொள்முதல் செய்ய இடைத்

தரகர்களுக்கு வண்டி வாடகையுடன் சேர்த்து ரூ.1.85 லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

Related Stories: