குடியரசு தின ராஜபாதை ஊர்வலம் டெல்லி மாணவர்கள் அணிவகுப்பு ஏற்பாடுகளுக்காக 4 பேர் கமிட்டி: டெல்லி அரசு தகவல்

புதுடெல்லி: குடியரசு தின ராஜபாதை அணிவகுப்பு நிகழ்ச்சியில் டெல்லி மாணவர்களின் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனிக்க 4 பேர் கமிட்டியை ஆம் ஆத்மி அரசு அமைத்து உள்ளது. குடியரசு தின நிகழ்ச்சியை விமரிசையாக கொண்டாடும் ஏற்பாடுகளில் மத்திய அரசு முனைப்பாக ஈடுபட்டு உள்ளது. ராஜபாதையில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் குறித்து துறை வாரியாக ஒத்திகைகளும் தொடங்கியுள்ளது. அணிவகுப்பில் டெல்லி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்பது வாடிக்கை. கொரோனா தீவிரம் குறைந்து உள்ளதாக மத்திய அரசு தரப்பில் இதுவரை உறுதியான அறிக்கை வெளிவராத நிலையில், அணிவகுப்பில் டெல்லி பள்ளி மாணவர்கள் பங்கேற்பது குறித்து ஆம் ஆத்மி அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அறிக்கையில் அரசு கூறியிருப்பதாவது:

பாதுகாப்புத் துறை ஒப்புதல் வழங்கியுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (என்ஐஎப்டி) பரிந்துரை செய்த கலாசாரத்தை பறை சாற்றும் அலங்கார ஆடை அணிந்து ராஜபாதையில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. என்ஐஎப்டி பரிந்துரைத்த ஆடை மற்றும் அதனை அலங்காரம் செய்ய பயன்படுத்த உள்ள இதர நகாசு பொருட்கள் வாங்கவும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படும். இந்த நடைமுறைகளை பின்பற்றவும், ஒப்பனை மற்றும் நடனக் கலைஞர்கள் ஏற்பாடு, செயற்கை நகைகள் கொள்முதல், பாடல்கள் ஒலிப்பதிவு போன்ற விஷயங்களை தீர்மானிக்க 4 பேர் கொண்ட கமிட்டியை மாநில கல்வி இயக்குநரகம் நியமித்து உள்ளது.

அணிவகுப்புக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் உள்பட அணிவகுப்பு தொடர்புடைய அனைத்து ஆட்களும் மத்திய உள்துறை மற்றும் குடும்ப சுகாதார அமைச்சகங்கள் அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டி விதிமுறைகளை முற்றிலும் தீவிரமாக பின்பற்ற வேண்டும். ஒத்திகையிலும், ராஜபாதை அணிவகுப்பிலும் மாஸ்க் அணிதல், சானிடைசிங் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவை தீவிரமாக கண்காணிக்கப்படும். ஒத்திகையில், மாணவர்களின் திறமை அதிருப்தி அளிப்பதாக பாதுகாப்பு துறையின் வல்லுநர் கமிட்டி கருதினால், அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் என்பதை மாணவர்களும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

* சிறப்பு விருந்தினர் வருவாரா?

குடியரசு தின கொண்டாட்டத்துக்கு வெளிநாட்டு விஐபிக்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது மரபு. அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த முறை அழைக்கப்பட்டு உள்ளதாகவும் அவரது வருகை உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு கடந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தது. ஆனால், கொரோனா புது வடிவத்துடன் அதி தீவிரமாக இங்கிலாந்தை மட்டுமன்றி அங்கிருந்து வந்த பயணிகளால் தற்போது இந்தியாவிலும் ஆட்டம் காட்டி வருகிறது. எனவே இங்கிலாந்து விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. தடை நீட்டிப்பு குறித்து இன்று தகவல் வெளியாகும் என கருதப்படும் வேளையில், புது வடிவ தொற்று பீதி காரணமாக, குடியரசு தின கொண்டாட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வாரா என்பது குறித்த தகவலை மத்திய அரசு இதுவரை உறுதி செய்யாமல் உள்ளது.

Related Stories: