புரெவி புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய குழுவினர் புகைப்படத்தை மட்டுமே பார்த்துவிட்டு சென்றனர்: விவசாயிகள் குற்றச்சாட்டு

நாகை: புரெவி புயலால் பாதித்த நெற்பயிர்களை பார்வையிட வந்த மத்திய குழுவினர் புகைப்படத்தை மட்டுமே பார்வையிட்டு சென்றதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். புரெவி புயலால் நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பாதிப்படைந்தது. இதை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சக இணைச்செயலாளர் அகடோஷ் அக்னி ஹோத்ரி தலைமையில் மத்திய வேளாண்மைதுறை அமைச்சக இயக்குநர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக மண்டல அலுவலர் ரனன்ஜெய் சிங், மத்திய நிதித்துறை அமைச்சக துணை இயக்குநர் அமித்குமார், மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குநர் சுபம்கார்க், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக உதவி ஆணையாளர் மோகித்ராம், மத்திய மீன்வளத்துறை ஆணையர் பால்பாண்டியன், மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் ஹர்ஷா ஆகியோர் அடங்கிய மத்தியகுழு நேற்றுமுன்தினம் மயிலாடுதுறை வந்தது. அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். பின்னர் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினர்.

இந்நிலையில் நேற்று நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கன்னி, கீழ்வேளூர் ஒன்றியம் வடக்குபண்ணையூர் ஆகிய பகுதிகளில் மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அப்போது, புரெவி புயலால் சேதமடைந்த தோட்டக்கலை பயிர்கள் மற்றும் நெற்பயிர்களை புகைப்படத்துடனும், சேதமடைந்த காய்கறிகள், நெற்பயிர்கள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.  மத்திய குழுவிடம் விவசாயிகள் கொடுத்த மனுவில், புரெவி புயலால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி போய்விடும் என குறிப்பிட்டிருந்தனர்.

 

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மத்திய குழுவினர் புகைப்படங்களை மட்டுமே பார்வையிட்டனர், பாதிக்கப்பட்ட வயல்களை நேரில் பார்க்காமல் சென்றது வேதனை அளிக்கிறது. எனினும் தங்களது அறிக்கையை காலதாமதம் இன்றி மத்திய அரசிடம் சமர்ப்பித்து, புரெவி புயலால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்றனர். ஆய்வின் போது கலெக்டர் பிரவீன் பி நாயர், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கல்யாணசுந்தரம், ஆர்டிஓ பழனிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: