சிறுபான்மையினர் சுதந்திரம் பறிப்பு பாக்.கில் ஆண்டுக்கு ஆயிரம் பெண்கள் கட்டாய மதமாற்றம்: சர்வதேச அமைப்பு கண்டிப்பு

கராச்சி: தேவாலயங்களில் கீர்த்தனை பாடுவது நேகாவுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், கடந்த ஆண்டோடு இந்த விருப்பம் எல்லாமே முடிந்து விட்டது. ஆமாம்... 14 வயதான நேகா, கிறித்துவ மதத்திலிருந்து முஸ்லிமாக வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டு விட்டாள். 45 வயதான முஸ்லிம் ஆண் ஒருவன் நேகாவை திருமணம் செய்து கொண்டு, மதம் மாற்றி விட்டான். ஏற்கனவே திருமணமான அவனுக்கு நேகாவின் வயதில் பெண் குழந்தைகளும் உண்டு. பாகிஸ்தானில் நடக்கும் பல சம்பவங்களுக்கு நேகா என்பது ஒற்றை உதாரணம். பாகிஸ்தானில் இதுபோல் ஆண்டுதோறும் ஆயிரம் சிறுபான்மை இனப் பெண்கள், திருமணம் என்கிற வலையின் மூலம் கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்படுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.  ‘இந்து, கிறிஸ்துவம் மற்றும் சீக்கிய பெண்களுக்கு கட்டாயத் திருமணம் மூலம் கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது. இந்த ஆபத்து வளையத்தில் திருமண வயதை எட்டாத சிறுமிகளும் அதிகம் சிக்கி வருகின்றனர்’ என சர்வதேச மத சுதந்திர ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘பலர் கடத்தப்பட்டு கட்டாயத் திருமணத்துக்கு ஆளாகின்றனர். பலர் ஏமாற்றப்பட்டு திருமணம் செய்யப்படுகின்றனர். இன்னும் பலர் குடும்ப ஏழ்மையின் காரணமாக, பெற்றோர் சம்மதத்துடனேயே வசதி படைத்த பெரிய மனிதர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டு மதம் மாற்றப்படுகின்றனர்’ என்கிறார் பாகிஸ்தானில் இருக்கும் மனித உரிமை ஆர்வலர் ஒருவர்.  சிந்து மாகாணத்தில் இதேபோல் 13 வயதான சோனியா குமாரி என்ற சிறுமி கடத்தப்பட்டாள். இது பற்றி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை மறுத்த அந்த சிறுமி, விருப்பத்துடனேயே திருமணம் செய்து கொண்டதாக கூறினாள்.  ‘மிரட்டப்பட்டதன் காரணமாக சோனியா குமாரி இப்படி சொல்லியிருக்கலாம். அவளது எதிர்காலம் குறித்து பயமாக இருக்கிறது. மோசடியாக அவளது வயது 19 என்று சான்றிதழில் திருத்தப்பட்டுள்ளது’ என்று சோனியா குமாரியின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.  தனிமனித உரிமைகளுக்கும், மத சுதந்திரத்துக்கும் எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: