புத்தாண்டு கொண்டாட வருவோருக்கு கடும் கட்டுப்பாடு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பின் கடற்கரை சாலையில் மக்களுக்கு அனுமதி: டிஜிபி, ஏடிஜிபி, கலெக்டர் கூட்டாக பேட்டி

புதுச்சேரி: புதுவையில் புத்தாண்டு கொண்டாட கடற்கரைக்கு செல்வோருக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும். கடலில் குளிக்கவும், கடற்கரையில் மது அருந்தவும் தடை விதிக்கப்படுகிறது. மக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என டிஜிபி, ஏடிஜிபி, கலெக்டர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி டிஜிபி பாலாஜி வத்சவா, கூடுதல் டிஜிபி ஆனந்தமோகன், மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை செய்து வருகிறது.

அண்டை மாநிலங்களில் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தடுப்பு தொடர்பாக மத்திய அரசும், மாநில அரசும் நீதிமன்றங்களும் பல வகையான வழிமுறைகள், விதிகளை வகுத்துள்ளது. அந்த கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் தற்போதுவரை அமலில் உள்ளது.  இதற்கிடையே கொரோனா வைரஸ் உருமாறி பரவும் திறன் அதிகரித்துள்ளது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ளும் நடைமுறைகளை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து கூட்டங்களை நடத்தி புத்தாண்டு கொண்டாட்டங்களை முறைப்படுத்துவது குறித்து சில நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறிப்பாக வரும் 31ம்தேதி வரை வாகனங்கள் வழக்கம்போல் ஒயிட்டவுன் பகுதிக்குள் அனுமதிக்கப்படும். அதன் பிறகு மறுநாள் காலை 9 மணி வரை நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இப்பகுதிக்குள் வசிக்கும் மக்கள் வெளியே சென்று வர ஏதுவாக பாஸ் (அடையாள அட்டை) வழங்கப்படும்.

 மேலும் புதுச்சேரியில் ஏற்கனவே வந்து ஓட்டல்கள், விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளுக்கு தனியாக அடையாள அட்டை வழங்கப்படும்.

 புதுச்சேரியில் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள், பீச் ரிசார்ட்டுகளில் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. புதுச்சேரியின் எல்லைகளான கனகசெட்டிக்குளம், முள்ளோடை, மதகடிப்பட்டு ஆகிய மாநில எல்லைகள் வழியாக புதுச்சேரிக்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். புதுச்சேரி கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை பழைய துறைமுகம், உப்பளம் பெத்திசெமினார் பள்ளி அம்பேத்கர் சாலை, ஹெலிபேடு வளாகம், உள்ளாட்சி துறை அலுவலகத்தின் எதிரே உள்ள காலியிடம் ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.

 செஞ்சிசாலை. எஸ்வி பட்டேல் சாலை, சுப்பையா சாலை வழியாக கடற்கரைக்கு வரலாம். கடற்கரையில் உள்ள குறைவான இடத்திற்கு ஏற்றாற்போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவாரக்ள். கடற்கரைக்கு சாலைக்கு வருபவர்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. மேலும் கடற்கரையில் மது அருந்தவோ, போதைப்பொருள் பயன்படுத்தவோ அனுமதியில்லை.  கடற்கரைச்சாலையின் அனைத்து நுழைவு வாயில்களிலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக் கப்படுவார்கள்.

ஆனால் அவர்கள் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவார்கள். மேலும் ட்ரோன்கேமரா மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் நலனுக்காக முதல்உதவி மையங்கள், தற்காலிக கட்டுப்பாட்டு அறை கடற்கரை சாலையில் அமைக்கப்படும். புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து இசிஆர் சாலை செல்லும் பேருந்துகள், நெல்லித்தோப்பு. இந்திராகாந்தி சதுக்கம், ராஜிவ்காந்தி சதுக்கம் வழியாக செல்ல வேண்டும். இசிஆர் வழியாக வரும் வாகனங்கள் ராஜிவ்காந்தி சதுக்கம், இந்திராகாந்தி சதுக்கம் வழியாக பேருந்து நிலையம் வர வேண்டும்.

 அனைவரும் மாறுபட்ட உருமாறிய காரோனா வைரஸ் பிடியில் இருக்கிறோம். எனவே பொதுமக்கள்தங்கள் இருப்பிடத்திலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெளியில் வரும்போது வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து நடைமுறை சிக்கல்களுக்கு மத்தியில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அரசு கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. எனவே பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: