மின்சார வசதியே இல்லாத பூலான்கொல்லை கிராமம்: பொதுமக்கள் அவதி

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே பூலான்கொல்லை கிராமத்தில் மின்சார வசதியே இல்லாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள கொளக்குடி ஊராட்சி பூலான்கொல்லை கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமமாகும். இந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 200 குடும்பங்களிலும் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள அனைவருமே விவசாய தொழிலாளர்கள். இங்குள்ள பெரும்பாலான வீடுகள் கூரை வீடுகளாகவே உள்ளது. இதுவரை இங்குள்ள 200 வீடுகளில் 10 வீடுகள் மட்டுமே மின் வசதி பெற்றுள்ளது. மற்ற வீடுகள் அனைத்திலும் இதுவரை மண்ணெண்ணெய் விளக்கு தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு படிக்கக்கூடிய மாணவ மாணவிகள், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் படிக்கின்றனர். தேர்தல் நேரங்களில் மட்டும் இங்கு வாக்கு சேகரிக்க வேட்பாளர்கள் படையெடுக்கின்றனர். அப்போது ஒவ்வொரு முறையும் மின்வசதி செய்து தருவதாக வேட்பாளர்கள் உறுதிமொழியும் தருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்த நூற்றாண்டு காலத்திலும் தமிழகத்திலேயே மின்வசதி பெறாத கிராமம் என்று ஒன்று உள்ளது என்றால் அது பூலான்கொல்லை கிராமம் தான். இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கத்திடம் மின்வசதி செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். எனவே பூலான்கொல்லை கிராமத்துக்கு மின்வசதியை விரைந்து செய்து கொடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: