உரிமைக்காக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தேசதுரோகிகள் பட்டம் : காங். செயல்தலைவர் சதீஷ்ஜார்கிஹோளி குற்றச்சாட்டு

பெங்களூரு: தங்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தேசதுரோகிகள் பட்டம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் மாநில செயல்தலைவர் சதீஷ்ஜார்கிஹோளி தெரிவித்தார். பெலகாவி மாவட்டம் கோகாக் நகர் கில்கார்டனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 136ம் ஆண்டு விழா, மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில செயல்தலைவர் சதீஷ்ஜார்கிஹொளி பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் விமான நிலையம், ரயில் நிலையம், பெட்ரோலியம், பி.எஸ்.என்,எல். உட்பட பல்வேறு வளர்ச்சிகளை கஷ்டப்பட்டு 70 ஆண்டுகளாக பராமரித்து வந்தது. ஆனால் இவைகளை 7 ஆண்டுகளில் பா.ஜ.வினர் விற்பனை செய்து வருகின்றனர். அதே போல் காங்கிரஸ் 70 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என்று பா.ஜ.வினர் தெரிவித்து வருகின்றனர். நாங்கள் எதையும் செய்யாமல் இருந்தால் விமான நிலையம், ரயில் உட்பட அனைத்தையும் உங்களால் எப்படி விற்பனை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் தற்போது பா.ஜ. ஆட்சியில் ஒவ்வொரு தொகுதியும் குறிவைத்து தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி இரவு 8 மணிக்கு டி.வியில் பேசுகிறார் என்றால் ஏதோ நடக்க போகுது என்பது அர்த்தம். அதே போல் தற்போது விவசாயிகள் அவர்களின் அடுத்த கட்ட குறிக்கோள். தங்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தேசதுரோகிகள் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதம் பெலகாவி மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் பூத் மட்டத்தில் கட்சியை பலப்படுத்த நிர்வாகிகள் முயற்சிக்கொள்ள வேண்டும். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்திகளை தள்ளிவைத்து கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர முன்வர வேண்டும்’’ என்றார்.

Related Stories: