சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி? 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்: விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு; அதிமுக கடும் அதிர்ச்சி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அப்போது தேர்தல் தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்று தேமுதிக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியது. தொடர்ந்து அதிமுக அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து தேமுதிக தரப்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருமா என்ற கேள்வி எழுந்தது. காரணம், அதிமுக கூட்டணியில் பாஜ உள்ளது என்று அரசு விழாவிலேயே முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் ஓப்பனாக அறிவித்தனர். ஆனால் மற்ற கூட்டணி கட்சிகளின் பெயர்களை குறிப்பிடவில்லை. இதுவே கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிமுக தலைமைக்கு ஷாக் கொடுக்கும் வகையில், சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரி மாதத்தில் நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுவில் தான் அறிவிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம் என்று கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். அதே போல அண்மையில் நடந்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோனை கூட்டத்தில் நிர்வாகிகள் கூட்டத்திலும் கடந்த நான்கரை ஆண்டில் அதிமுக தலைவர்கள் நம்மை மதிக்கவே இல்லை. ஆனால் பாஜவினருக்கு முதல் மரியாதை கொடுக்கின்றனர். எனவே, நாம் தனித்து நின்று நம் பலத்தை காட்டுவோம் என்று கொந்தளித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று அதிரடியாக வெளியிட்டார். இதனால், சட்சபை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட போகிறதா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நடைபெற உள்ள 2021 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு, 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் முதல் கட்டமாக நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு மாவட்டம், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளை கழகம், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளராக எஸ்.பி.டி.ராஜேந்திரன், பொன்னேரி (தனி)- எஸ்.பி.ரமேஷ், திருத்தணி-பி.சுரேஷ்பாபு, திருவள்ளூர்-கே.சரவணன், பூந்தமல்லி(தனி)-ஸ்ரீராம். ஆவடி-பி.மாரியப்பன், மதுரவாயல்-பெ.ராமமூர்த்தி, அம்பத்தூர்-எம்.ஆனந்தகுமார், மாதவரம்-கே.ஜி.பாபுராவ், திருவொற்றியூர்- ஜெ.ஆரோக்கியராஜ், ஆர்.கே.நகர்- பி.எம்.மகாலிங்கம், பெரம்பூர்- கே.ஆர்.சீனிவசன். கொளத்தூர்-எஸ்.கவிதா, வில்லிவாக்கம்-ஏ.தனசேகரன், திரு.வி.க.நகர்(தனி)- பி.ஹரிகிருஷ்ணன், எழும்பூர் (தனி)-கே.கோவிந்தன், ராயபுரம்-எம்.கண்ணன், துறைமுகம் -எஸ்.கே.மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- என்.எம்.டி.செல்வராஜன், ஆயிரம் விளக்கு-வி.குலசேகரன், அண்ணாநகர்-எஸ்.கருப்பையா, விருகம்பாக்கம்- எஸ்.காளிச்சரண், சைதாப்பேட்டை- மடுவை ஆர்.சுப்பு, தி.நகர்-இரா.சுரேஷ், மைலாப்பூர்-ஆர்.கே.முருகன், வேளச்சேரி-எஸ்.கலா, சோழிங்கநல்லூர்-பி.டி.சி. ரமேஷ், ஆலந்தூர்-சி.செல்வ ஜோதிலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேமுதிகவின் இந்த அறிவிப்பு அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் 234 தொகுதிகளிலும் தேமுதிகவினர் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். ஏற்கனவே பாஜக அமைச்சரவையில் பங்கு, அதிக தொகுதிகள் என்று அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் தேமுதிகவும் அனைத்து தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இது அதிமுகவுக்கு இரட்டை தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: