சீனாவில் தொடரும் தாக்குதல் கத்தியால் குத்தி 7 பேர் கொலை

பீஜிங்: சீனாவின் வடகிழக்குப் பகுதியில் 7 பேரைக் கத்தியால் குத்திக்கொலை செய்த இளைஞரைக் கைது செய்தது போலீஸ். லயோனிங் மாகாணத்தில் உள்ள கையுவான் நகரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இங்கு மக்கள் குளிப்பதற்காக பொது இடம் உள்ளது. இங்கு குளித்த வாலிபன் ஒருவன், திடீரென்று கண்ணில் கண்டோரை எல்லாம் கத்தியால் குத்தினான். எதிர்பாராத இந்த வெறிச்செயலால், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலையாளியை மடக்கி கைது செய்துள்ள போலீசார், அவனிடம் கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். யாங் என்று பெயர் கொண்ட கொலையாளி இதுவரை காரணம் எதுவும் சொல்லவில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில், பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறும்.

சீனாவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. கடந்த ஜுன் மாதத்தில் பள்ளி காவலாளி ஒருவன், 39 பேரை சராமரியாகக் குத்தினான். குவாங்சி பகுதியிலுள்ள மழலையர் பள்ளியில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2018ம் ஆண்டு பீஜிங்கில் உள்ள வணிக வளாகம் ஓன்றில் புகுந்த ஒருவன், கத்தியால் பலரை குத்தியதில் 12 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.

* அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி

கடந்த சனிக்கிழமை இரவு அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள டான் கார்டர் பகுதியில் ஒருவன் சராமரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில், 3 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 37 வயதான கொலையாளியை ராக்போர்ட் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: