6 எம்எல்ஏக்களை வலைத்து போட்ட பாஜக; அருணாச்சல பிரதேச ‘கதி’ தான் பீகாருக்கும்!: நிதிஷ் கட்சி குறித்து லாலுவின் மகன் விமர்சனம்

பாட்னா: அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய்ந்தது போல், பீகாரிலும் நடக்கும் என்று லாலுவின் மகன் விமர்சனம் செய்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கட்சி அருணாச்ச பிரதேசத்தில் 2019 சட்டமன்றத் தேர்தலில் ஏழு இடங்களில் வென்றது. 41 இடங்களைப் பெற்ற பாஜகவுக்குப் பிறகு இரண்டாவது பெரிய கட்சியாகவும் உருவெடுத்தது. தற்போது 60 உறுப்பினர்களைக் கொண்ட  மாநில சட்டசபையில் 48 எம்எல்ஏக்களை பாஜக கொண்டுள்ளது. அதே நேரத்தில் 7 எம்எல்ஏக்களை வைத்திருந்த ஐக்கிய ஜனதா தளம் தற்போது ஒரு எம்எல்ஏ மட்டுமே உள்ளது.

காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் அருணாச்சலப் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம்  கட்சியை சேர்ந்த ஏழு  எம்எல்ஏக்களில் 6 பேர் ஆளும் பாஜகவுக்கு தாவியுள்ளனர்  என்று  மாநில  சட்டமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும்  அருணாச்சல் மக்கள் கட்சியின் (பிபிஏ) ஒரே ஒரு எம்எல்ஏவான லிகாபாலி  தொகுதியைச் சேர்ந்த கர்டோ நைகியோரும் பாஜகவில் சேர்ந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. பீகாரில் கூட்டணியில் உள்ள பாஜக, தற்போது தனது பக்கம் நிதிஷ் கட்சியின் 6 எம்எல்ஏக்களை இழுத்துள்ளதால் இருகட்சிகளுக்கு இடையிலான உறவை பாதித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ், நேற்று சிறையில் உள்ள தனது தந்தை லாலுவை சந்தித்தார். லாலு பிரசாத்தின் உடல்நிலை குறித்து டெல்லியில் உள்ள பல மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுவருவதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 25 சதவீதம் அளவிற்கு மட்டுமே வேலை செய்கிறது. பீகாரில் நிதிஷ் குமாரின் இருப்பு முடிந்துவிட்டது. விரைவில் பீகாரில் ஆட்சி கவிழப் போகிறது. அருணாச்சல பிரதேசத்தில் நிதிஷ் கட்சியின் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது போல், பீகாரிலும் நடக்க வாய்ப்புள்ளது. அதனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சி காணாமல் போகும்’ என்றார்.

Related Stories: