சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சேலத்தில் பிப்.6ல் பாஜ இளைஞர் அணி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சேலத்தில் வருகிற பிப்ரவரி 6ம் தேதி பாஜ இளைஞர் அணியின் பிரமாண்ட மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தமிழக பாஜ இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமை தாங்கினார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாவட்ட தலைவர்கள், மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக பாஜ தலைவர் எல்.முருகன், மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், பொது செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல், பிரசார யுக்திகள், வெற்றி வியூகங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர் அணியினருக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும். இளைஞர் அணி சார்பில் பிரமாண்ட மாநாடு நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முடிவில் இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் அளித்த பேட்டியில், ” தமிழக பாஜ இளைஞர் அணியின் சார்பில் மாபெரும் மாநாடு சேலத்தில் வருகிற பிப்ரவரி 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிரமாண்ட பேரணியும் நடைபெறும். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் இதில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் தமிழக பாஜ பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், இணை பொறுப்பாளர் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜவின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது” என்றார்.

Related Stories: