தனியார் கல்லூரி விடுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மாணவன் குத்திக்கொலை: 5 மாணவர்கள் கைது: பூந்தமல்லி அருகே பரபரப்பு

சென்னை: பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜமீன் கொரட்டூரில்  தனியார் மரைன் இன்ஜினியரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் 172 வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்  தங்கி பயின்று வருகின்றனர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12.50 மணி அளவில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி உள்ளனர். அப்போது மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே  வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.  இந்தத் தாக்குதலில் பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவன் ஆதித்யா ஷர்மா(20) என்பவர் தொண்டையில் அளவுகோலால் குத்தியதில்  தொண்டை கிழித்துக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக  தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகப்பிரியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி துரைப்பாண்டியன்,  தலைமையில் வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபாதேவி, மணவளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்லூரியில் மாணவர்களிடையே விசாரணை நடத்தினர்.  இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: