சிவகங்கையில் பரபரப்பு நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: துணை இயக்குநர் அறையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை டவுன் பிளானிங் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். துணை இயக்குநர் அறையில் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நகர் ஊரமைப்பு (டவுன் பிளானிங்) அலுவலகம் உள்ளது. சிவகங்கை மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கட்ட இங்குதான் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும். இங்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது துணை இயக்குநர் நாகராஜன் அறையில் இருந்து ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டது. துணை இயக்குநர் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சிவகங்கையில் உள்ள இந்த அலுவலகம் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான மண்டல அலுவலகமாக செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மூன்று மாவட்ட அலுவலகமும் தனித்தனியே பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

Related Stories: