எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயார்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அரியலூர்: என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத்தயார் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பரப்புரையை அரியலூர் மாவட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கினார். அப்போது அரியலூர் புறவழி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் கலைஞர் சிலையை திறந்து வைத்து கட்சி கொடி ஏற்றினார். பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மத்திய அரசிற்கு அடிமையாக உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறையில் தனது சம்மந்திக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் விட்டு, அப்பணத்தை தனது சம்மந்தி மூலம் தனது பாக்கெட்டுக்கு  கொண்டு வந்து ஊழல் ஆட்சி நடத்தி வருகிறார். என்மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார். பொதுமக்கள் அனைவரும் நான்கு மாதங்களில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திமுக முன்னாள் எம்எல்ஏ மறைந்த ஆறுமுகம் வீட்டிற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் சாலையில் நடந்து சென்று வணிகர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து, கீழப்பழுவூரில் உள்ள மொழிப்போர் தியாகி சின்னச்சாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த உதயநிதி ஸ்டாலின், கண்டிராதீர்த்தம் கிராமத்தில் உள்ள சோழமாதேவி ஏரியை பார்வையிட்டார். பின்னர் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் உதயநிதிஸ்டாலின் பேசுகையில், ஊழல்கள் புரிந்த முதலமைச்சர், அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என்றார்.

Related Stories: