கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்து மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளோம்: காங். மூத்த தலைவர் ரஞ்சன் சௌத்ரி அறிவிப்பு.!!!

கொல்கத்தா: கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்து மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 1977 முதல் 2011 வரை  சுமார் 34 ஆண்டுகள் நடைபெற்ற இடதுசாரிகளின் ஆட்சியை தரைமட்டமாக்கி கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதனால்,  அதிருப்தியடைந்த கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து.

ஆனால், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் மாநில முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த  ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.  இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்றிவிட்டு ஆட்சியை கைப்பற்றுவதில் பாஜ குறியாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பாஜ தற்போதே மேற்கொண்டு வருகின்றது. மிகப்பெரிய அளவில் மக்களை சந்திக்கவும் ஆதரவு  திரட்டவும் பாஜ திட்டமிட்டுள்ளது.

இதனைபோல், காங்கிரஸ் கட்சியும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி  தெரிவிக்கையில், மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலை மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து  தேர்தலை சந்தித்தது. கூட்டணி அமைத்தும் காங்கிரஸைக் காட்டிலும் குறைவான இடங்களையே கம்யூனிஸ்ட் பெற்றது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், மேற்கு வங்க அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

Related Stories: