பஞ்சாயத்து தேர்தல் ருசிகரம்

குருமிட்கல் மக்களுக்கு நன்றியுடன் இருப்போம்: பிரியங்க் கார்கே உருக்கம்

மாநிலத்தில் முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிந்து 2வது கட்ட தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இதில் கட்சி ஆதரவுடன் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பது தொடர்பாக ஒவ்வொரு கட்சியினரும் தீவிர முயற்சியில் உள்ளனர். கலபுர்கி மற்றும் யாதகிரி மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து அதிகாரத்தை காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே தீவிரமாக உள்ளார்.யாதகிரி மாவட்டம், குருமிட்கல் தாலுகாவில் நேற்று தேர்தல் தொடர்பாக கட்சி தொண்டர்களிடம் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசும்போது, குருமிட்கல் தொகுதி மக்களுக்கு நான் மட்டுமில்லாமல் எனது குடும்பம் எப்போதும் நன்றியுடன் இருப்போம்.

கடந்த மக்களவை தேர்தலில் எனது தந்தையை தோற்கடிக்க எவ்வளவு பெரிய சதி நடந்தது என்பது தெரியும். அவரால் அரசியலில் வளர்க்கப்பட்டவர்கள், அவர் முதுகில் குத்திவிட்டனர். பஞ்சாயத்து தேர்தலில் எங்கள் பலத்தை காட்டுவோம்’’ என்றார்.

தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து  தேர்தலுக்கு தயாராகி வரும் பாஜ

மாநிலத்தில் இம்மாதம் 27ம் தேதியுடன் கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி சின்னம் பயன்படுத்துவதில்லை. ஆனால் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலர்கள் மற்றும் தலைவர்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடுவார்கள். இதில் வெற்றி பெறுவதை வைத்து எந்த கட்சி அதிக ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் பிடிக்கும் என்பதை உறுதியாக தீர்மானிக்க முடியும். மாநிலத்தில் தற்போது தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களின் பதவி காலம் ஏப்ரல் மாதம் முடிகிறது. காலியாகும் பதவிகளுக்கு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.  தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் நிர்வாகத்தை பிடிக்க பாஜ இப்போதே திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 10 லட்சம் தொண்டர்களை தயார் செய்துள்ளது. அவர்கள் வாக்கு சாவடி மட்டத்தில் வாக்காளர்களை கவரும் பணியை வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளனர்.

கிராம பஞ்சாயத்து தேர்தலில் சித்ரதுர்கா காங்கிரஸ் வசமாகும்

மாநிலத்தின் கோட்டை மாவட்டம் என்று பெயர் கொண்டுள்ள சித்ரதுர்கா மாவட்டம், காங்கிரஸ் கோட்டையாகவும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். அதே வெற்றியை கிராம பஞ்சாயத்து தேர்தலிலும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சித்ரதுர்கா மக்களவை தொகுதி முன்னாள் எம்பி சந்திரப்பா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ளதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கும் தாலுகாக்களில் பிரசாரத்தை தொடங்கிவுள்ளார். கட்சி தொண்டர்களிடம் நேற்று அவர் ேபசும்போது, ``முதல் கட்டமாக தேர்தல் முடிந்துள்ள பஞ்சாயத்துகளில் நமது கட்சி ஆதரவில் போட்டியிட்டுள்ளவர்கள் அதிகளவில் வெற்றி பெறுவது உறுதி. இரண்டாம் கட்ட தேர்தலிலும் அதே வெற்றியை நாம் பெற வேண்டும். அதற்கு ஒவ்வொரு தொண்டர்களும் உழைக்க வேண்டும்’’ என்றார்.

மக்கள் பிரதிநிதிகள் ஏன் பிரசாரம் செய்யக்கூடாது: எம்எல்ஏ கேள்வி

மாநிலத்தில் நடந்து வரும் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக எம்பி, எம்எல்ஏகள் பிரசாரம் செய்யக்கூடாது என்று தடுக்கப்படுகிறது. துமகூரு மாவட்டம், குனிக்கல் தொகுதி எம்எல்ஏ டாக்டர் ரங்கநாத் பிரசாரம் செய்ய சென்றபோது, அவர் தடுத்து நிறுத்தி அனுப்பி வைக்கப்பட்டார். அதுபோல் பல மக்கள் பிரதிநிதிகள் கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிக்க முடியாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து காபு தொகுதி எம்எல்ஏ லாலாஜி ஆர்.மெண்டன் கூறும்போது, ``மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்ககூடாது என்பதற்கு எந்த வழிகாட்டுதலும் மாவட்ட நிர்வாகம் முறைப்படி பிறப்பிக்கவில்லை. என்ன காரணத்திற்காக பிரசாரம் செய்யக்கூடாது ஏன் தடுக்கப்படுகிறது என்பதையும் விளக்கவில்லை. இது என்ன ஜனநாயகம் என்று புரியவில்லை’’ என்று விரக்தி வெளிப்படுத்தினார்.

போட்டியின்றி தேர்வு செய்துள்ளதை ரத்து செய்து தேர்தல் நடத்த கோரிக்கை

மாநிலத்தில் பல கிராம பஞ்சாயத்துகளில் ஏலம் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ₹50 ஆயிரம் தொடங்கி ₹1.50 கோடி வரை ஏலம் நடந்துள்ளது. இதனிடையில் பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகாவில் உள்ள ஹிந்திகுந்தி கிராம பஞ்சாயத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 6 வார்டுகளில் 27 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காக 59 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவாபஸ் பெறும் நாளில் 32 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். போட்டியில்லாததால் 27 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் கிராம பஞ்சாயத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து விட்டு, தேர்தல் நடத்த வேண்டும். எம்எல்ஏ ராஜீவ், தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலில் ேபாட்டியிட்டவர்களில் அவருக்கு வேண்டியவர்களை தவிர, மற்றவர்களை வாபஸ் பெற செய்துள்ளார். ஆகவே அதை ரத்து செய்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று தாசில்தார் அலுவலகம் வாசலில் கிராமத்தினர் போராட்டம் நடத்தினர்.

Related Stories: