இங்கிலாந்தில் இருந்து சாம்ராஜ்நகருக்கு வந்த 5 பேருக்கு கொரோனா பரிசோதனை: மாவட்ட கலெக்டர் எம்.ஆர் ரவி தகவல்

சாம்ராஜ்நகர்: இங்கிலாந்தில் இருந்து சாம்ராஜ்நகருக்கு 5 பேர் வந்திருப்பதால் அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் எம்.ஆர் ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் எம்.ஆர் ரவி கூறும்போது: இங்கிலாந்து, பிரிட்டன் உள்பட ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கண்காணித்து கொரோனா பரிசோதனை செய்யும்படி மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வெளி நாட்டு பயணிகளை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக இங்கிலாந்து, பிரிட்டனில் இருந்து வருபவர்கள் குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சகமே, மத்திய, மாநில அரசுக்கு தகவல் வழங்கியுள்ளது. அதை வைத்து மாவட்ட வாரியாக எத்தனை பேர் வந்துள்ளனர் என்பதை அடையாளம் கண்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு 5 பேர் வந்திருப்பதாக மாநில சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 பேரும் இங்லாந்தில் பணியாற்றிவிட்டு, கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடுவதற்காக சாம்ராஜ்நகர் வந்துள்ளனர். அவர்களை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இன்று அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.  கொரோனா இருப்பது உறுதியானால், அரசு உத்தரவுப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இது தவிர வெளி நாட்டு சுற்றுலா பயணிகளையும் கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யாரேனும் புதிதாக வந்தால், அவர்கள் குறித்து உடனே சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன். மேலும் சுற்றுலா பயணிகளும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஓட்டல், ரிசார்ட்டுகளில் யாரேனும் புதிதாக வந்து, தங்குவதற்கு அறைகேட்டால் உடனே தகவல் வழங்க அறிவுறுத்தியுள்ளோம் என்று மாவட்ட கலெக்டர் எம்.ஆர் ரவி தெரிவித்துள்ளார்.

Related Stories: