தங்கவயலை சுற்றியுள்ள கிராமங்களில் படையெடுக்கும் காட்டு யானைகள்: ஆந்திர மாநில எல்லைக்கு விரட்டும் வனத்துறையினர்

தங்கவயல்: கடந்த சில மாதங்களாக தங்கவயலை சுற்றிலும் உள்ள கிராமங்களின் விவசாய நிலங்களில் காட்டு யானைகள் தொடர்ந்து படையெடுத்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. தற்போது 13 யானைகள் அடங்கிய காட்டு யானை கூட்டம் தங்கவயல் அடுத்த கண்ணூர் கிராமம் அருகே முகாமிட்டு உள்ளன.  தங்கவயலின் தென்மேற்கில் தமிழக மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்ட வேப்பனபள்ளி காட்டு பகுதியும், கிழக்கில் ஆந்திர மாநில வி.கோட்டா அடுத்த காட்டு பகுதியும் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆந்திர மாநில காட்டு பகுதியில் இருந்து உணவையும், தண்ணீரையும் தேடி அதன் வழக்கமான வழி தடத்தில் வரும் யானை கூட்டம் பேத்தமங்கலம் வரை வந்து அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து விடும். அதே போல் தமிழக கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இருந்து வரும் யானை கூட்டம் பங்காருபேட்டையை அடுத்த கிராமங்கள் வரை வரும். அவ்வப்போது பலரும் இந்த யானை கூட்டத்திடம் சிக்கி மிதிப்பட்டு உயிர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு காட்டு யானைகள் கூட்டம், தங்கவயல் மேற்கே உலக மதி குன்றின் பின்புறம் தொடங்கி, தெற்கில் கட்ட மாதமங்கலம், பானகிரி, கிழக்கில் கேசம்பள்ளி, ராம் சாகரம் வரை சுற்றி திரிந்து வரும் இந்த யானை கூட்டத்தை ஆந்திர, தமிழக எல்லைகளில் உள்ள காடுகளுக்கு விரட்டி அடிக்க கர்நாடக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் கண்ணூர் கிராமத்தை சுற்றியுள்ள விவசாய‌ நிலங்களின் பயிர்களை நாசம் செய்த யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து ஆந்திர மாநில எல்லையோர காட்டிற்கு விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: