ஜம்மு-காஷ்மீர் கவுன்சில் தேர்தல் முடிவு: பரூக் தலைமையிலான கூட்டணி அபாரம்: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜ

காஷ்மீர்; ஜம்மு - காஷ்மீரில் நடந்த மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இந்த தேர்தல் மூலம் ஜம்மு - காஷ்மீரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. கடந்தாண்டு ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் 280 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி இம்மாதம் 19ம் தேதிவரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு  நடந்தது. தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட 6 கட்சிகள் இணைந்து ‘மக்கள் கூட்டணி’ என்ற பெயரில் போட்டியிட்டன.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இந்நிலையில், நேற்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி காஷ்மீர்  பிராந்தியத்திலும், ஜம்மு பிராந்தியத்தில் பாஜக அதிக இடங்களை பெற்றுள்ளன.இன்று காலை நிலவரப்படி தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஏழு கட்சிகள் 105 இடங்களில்  வென்றுள்ளது. பாஜக 74 இடங்களையும்,  காங்கிரஸ் 25 இடங்களையும் வென்றுள்ளது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட அப்னி கட்சி 10 இடங்களையும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி ஆறு இடங்களையும், சிபிஐஎம் ஐந்து இடங்களையும், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம்  மூன்று இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சி ஒரு இடத்தையும் பெற்றது.

கத்துவா மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் 13ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும் கூட, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது  தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய நிலையில் இன்றும் தொடர்ந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: