விவசாயிகளின் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் சரண் சிங் : பிரதமர் மோடி புகழாரம்!!

டெல்லி : விவசாயிகள் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் சரண் சிங் என்று அவரது பிறந்தநாளில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.முன்னாள் இந்திய பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான இன்று தேசிய விவசாயிகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்திற்குட்பட்ட நூர்பூரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தவர்.1902ல் மீரட்டில் பிறந்த சவுத்திரி சரண் சிங் மகாத்மா காந்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக பொறுப்பேற்றபோது துணை பிரதமராகவும் உள்துறை மற்றும் நிதி அமைச்சராகவும் பணியாற்றியவர்.சரண் சிங், ஜனதா கட்சி சார்பாக நாட்டின் 5வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1979 ஜூலை 28 முதல் 1980 ஜனவரி 14 வரை (24 வாரங்கள்) மிகக் குறைந்த கால அளவில் பணியாற்றியுள்ளார்.தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக, அவரது பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சரண் சிங் பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் கூறியுள்ளதாவது:சரண்சிங், கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சி ஆகியவற்றிற்காக சிறப்பாக பணியாற்றியவர். கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ள சிங் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: