அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினருக்கு கௌரவம்!: மூத்த நிர்வாகிகள் குழுவில் 2 இந்தியர்களுக்கு இடம்..!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் மூத்த நிர்வாகிகள் குழுவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 2 பேர் இடம்பெற்றுள்ளனர். அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்று அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோன்று துணை அதிபராக தெற்கு ஆசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் பைடன் பதவியேற்கவிருக்கிறார். அமெரிக்காவில் 46 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தங்கள் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுதம் ராகவன், வினய் ரெட்டி ஆகியோரை வெள்ளை மாளிகையில் கூடுதல் நிர்வாக அதிகாரிகள் குழுவில் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனராக கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். கவுதம், ஜோ பைடன் அறக்கட்டளைக்கு ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர்கள் இருவர் தவிர வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் குழுவில் அன்னே பிலிப்பிக், ரியான், புரூஸ்லிப், எலிசபெத் ஆகிய அமெரிக்கர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: