உருமாற்றத்துடன் பரவும் கொரோனாவை தடுக்க லண்டன் பயணிகளை தேடி பிடித்து பரிசோதனை: கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் சுகாதாரத்துறை

சென்னை:  லண்டன் விமானத்தில் வரும் பயணிகளை தேடி கண்டுபிடித்து கொரோனா செய்ய  சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் லண்டன் பயணிகளின் பட்டியலோடு கண்கொத்தி பாம்பாக காத்திருக்கின்றனர். லண்டனிலிருந்து நேற்று முன் தினம் இரவு டில்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது, இதையடுத்து கடந்த 10 நாளில் லண்டனிலிருந்து தமிழகம் வந்தவர்களை கண்டுப்பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய  இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை விமானநிலையத்தில் கூறினார்.

இந்நிலையில் நேற்று  சென்னை விமான நிலையம் வந்திருந்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;நேற்று முன் தினம் இரவு சென்னை வந்த லண்டன் பயணிகள் 14 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அதோடு அவர் பயணித்த விமானத்தில் அவர் அருகே அமர்ந்து வந்த பயணிகளை அடையாளம் கண்டு, அவர்களையும் மருத்துவ பரிசோதனை செய்ய இருக்கிறோம். மேலும் லண்டனிலிருந்து கடந்த 10 நாட்களில் தமிழகம் வந்த அனைவரையும் தேடி கண்டுப்பிடித்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வோம்.  

அதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை  விமான நிலையங்களில் அவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  அதோடு தற்போது லண்டன் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் லண்டனிலிருந்து வேறு விமானங்களில் வந்து தமிழகத்திற்குள் சாலை வழியாக சோதனை இல்லாமல் வந்துவிடக் கூடாது என்பதற்காக குறிப்பாக பெங்களூரிலிருந்து வரவாய்ப்பு இல்லாததால், தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியை தீவிரமாக கண்காணிக்கிறோம். எனவே பயணிகளோ பொதுமக்களோ அச்சப்படத் தேவையில்லை என்று கூறினார்.

பயணிகளுக்கு மீண்டும் தனிமை முகாம்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை 14  நாட்கள் ஓட்டல் அல்லது அரசு முகாம்களில் தனிமைப்படுத்தும் முறை 82 நாட்கள் இடைவெளிக்கு பின்பு நேற்று இரவிலிருந்து மீண்டும் தொடங்கியுள்ளது.

Related Stories: