தலைநகர் இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணர் கோயில் கட்ட பாக். அரசு அனுமதி: 6 மாத முட்டுக்கட்டை நீங்கியது

இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணர் கோயில் கட்டவும், இதன் அருகே உள்ள மயானத்துக்கு சுற்றுச்சுவர் கட்டவும் பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தப்படி, இந்நாட்டில் மிகப்பெரிய மத சிறுபான்மையினராக இந்துக்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இவர்களுக்கு  என்று இந்து கோயில்கள் எதுவும் கிடையாது. இந்நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில்  கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்காக கடந்த 2017ல் அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பால், இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் 20 ஆயிரம் சதுர  அடியில் பிரமாண்ட கோயில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது, அங்குள்ள தீவிரவாத இஸ்லாமிய மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், இப்பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. மேலும், இந்த இடத்தின்  அருகே இந்துக்களுக்கான மயானமும் இடம் பெறுகிறது. இதற்கு சுற்றுச்சுவர் கட்டவும் தலைநகர மேம்பாட்டு ஆணையம் தடை விதித்தது.

பாகிஸ்தானின் பலம் வாய்ந்த ‘இஸ்லாமிய சிந்தாந்த குழு’வுக்கு, இந்த பிரச்னையை பாகிஸ்தான் மத விவகாரத் துறை அமைச்சர் நூரல் ஹக் கதாரி பரிந்துரை செய்தார். அதை பரிசீலித்த இந்த குழு, ‘பாகிஸ்தானில் எந்தவொரு மதத்தினரும்  சுதந்திரமாக வாழலாம். அவர்கள் தங்களுக்கு வழிபாட்டு தலங்களை கட்டுவதற்கும், மயானம் அமைப்பதற்கும் தடையில்லை,’ என்று தெரிவித்தது. இதையடுத்து, கிருஷ்ணர் கோயில் கட்டவும், மயானத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடரவும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தலைநகர மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

* பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். ஆனால், இந்து மக்களின் கணக்கின்படி 90 லட்சம் இந்துக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது.

* சிந்து மாகாணத்தில்தான் இந்துக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். அங்கு அவர்கள் இஸ்லாமிய மக்களுடன் கலாசாரம், பாரம்பரிய நடைமுறைகளில் இணக்கமாக உள்ளனர்.

Related Stories: