திருவாதிரை திருவிழா: நெல்லையப்பர், செப்பறை கோயில்களில் இன்று கொடியேறியது

நெல்லை: திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நெல்லை சுவாமி நெல்லையப்பர் மற்றும் செப்பறை கோயில்களில் இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. பனி குளிரை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். நெல்லை சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழா முக்கியமானதாகும். நடப்பு ஆண்டிற்கான மார்கழி திருவாதிரை திருவிழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நடுங்கவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து வருகிற 24ம் தேதி 4ம் திருநாள் இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடக்க உள்ளது. திருவிழாவை முன்னிட்டு சுவாமி கோயிலின் 2ம் பிரகாரத்தில் உள்ள பெரிய சபாபதி சன்னதி முன் நாளை 22ம் தேதி முதல் 30ம் தேதிவரை அதிகாலை 5 மணிக்கு திருவெம்பாவை வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 29ம் தேதி இரவு முழுவதும் கோயிலின் 2ம் பிரகாரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்பு மிக்க தாமிரசபையில் நடராஜருக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற உள்ளது. தாமிரசபை முன்உள்ள கூத்தபிரான்  சந்நிதியில் பசு ஒன்று நிறுத்தப்படுகிறது. இது, சிவபெருமாள் மீண்டும் படைத்தல் தொழிலை மேற்கொள்வதை குறிக்கிறது.

இந்த பசுதீபாராதனை 30ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைபெறும். தொடர்ந்து காலை 3.30 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராமராஜா செய்துள்ளார்.

இதுபோல் நெல்லை அடுத்துள்ள ராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இங்கு தினமும் காலை மாலை இங்குள்ள நெல்லையப்பர், காந்திமதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்க உள்ளது.

27ம் தேதி அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 30ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகம் தொடங்கி நடைபெறும். காலை 5 மணிக்கு கோபூஜையும் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. அன்று மதியம் 1 மணிக்கு நடன தீபாராதனை நடக்கிறது.

Related Stories: