ஒரு மாதத்தில் ஓபிஎஸ் கவர்னராகவும், இபிஎஸ் பாஜ தலைவராகவும் மாறுவார்கள் ஆடியோ, வீடியோவை வைத்து கட்சி நடத்தும் பாஜ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 2வது நாளாக நேற்று சூரம்பட்டி நால்ரோடு, ஆலமரத்து தெரு, காமாட்சி காடு, கருங்கல்பாளையம் காந்திசிலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தால் நான் மாதம் ஒரு முறை உங்களை சந்திக்க ஈரோட்டிற்கு வருவேன். தாய்மார்கள் முடிவு செய்தால் அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. அதிமுக வேட்பாளர் பிரசாரத்திற்கு சென்றால் மக்கள் துரத்தி அடிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மீசை இருக்கிறதா? என்று கேட்கிறார். மீசை இருந்தால் ஷேவ் செய்து விடவா போகிறீர்கள். தமிழக உரிமைகளை பாஜவிடம் அடகு வைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவைதான் மக்கள் வாக்களித்து முதல்வராக்கினார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்து தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதல்வரானார். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு உண்மையாக இருந்தது இல்லை. ஒன்றிய அரசுக்கு காவடி தூக்கிக்கொண்டு இருக்கிறார். அதிமுக கட்சி பஞ்சாயத்து, வேட்பாளர், சின்னம் என எல்லாவற்றையும் டெல்லி பாஜ தலைமைதான் முடிவு செய்கிறது. கமலாயத்தில் அப்பாயிண்ட்மெண்டிற்காக அதிமுக காத்திருக்கிறது. தமிழக பாஜ கட்சியாக இல்லை. ஆடியோ, வீடியோ வைத்து நடத்தும் கட்சியாக உள்ளது. கவர்னர்களை நியமித்து கோச்சிங் அளிக்கிறார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்வதால் தமிழக மக்கள் பாஜவுக்கு ஆதரவு தரமாட்டார்கள். ஒரு மாதத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் ஏதாவது மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்படுவார். அதன்பிறகு தமிழக பாஜ தலைவராக எடப்பாடி பழனிசாமி வந்துவிடுவார். அதிமுக எக்காரணம் கொண்டும் தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்க மாட்டார்கள். இந்த தேர்தலில் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு ஆய்வு செய்ய வந்த பாஜ தேசிய தலைவர் நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் இந்த செங்கல் ஒன்றுதான் அங்கு இருந்தது. கேடு கெட்ட பாஜவுக்கு ஜால்ரா அடிக்கும் அதிமுகவுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டுமெனில் கை சின்னத்திற்கு வாக்களியுங்கள். இவ்வாறு பேசினார். * புகைப்பட ஆதாரங்களை காட்டி பிரசாரம்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது சசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்த போட்டோ, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலையை விளக்கும் போட்டோ, சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட கிங்ஸ் மருத்துவமனை போட்டோ, மதுரையில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூலகம் போட்டோக்களை காட்டியும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி நடக்கவில்லை என்பதை விளக்க எய்ம்ஸ் என எழுதிய செங்கல்லை காட்டியும் பிரசாரம் செய்தார். * எல்லாமே அதானிக்குதான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘மோடியின் நண்பரான அதானியின் சொத்து  மதிப்புரூ.6 லட்சம் கோடியாக உள்ளது. எந்த திட்டமாக இருந்தாலும் அதானிக்கு தான் கொடுக்கப்படுகின்றது. விமானம்,  ரயில்வே, துறைமுகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தும் அதானியிடம்  கொடுக்கப்பட்டுவிட்டது. மோடிக்கு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே நண்பர். பிபிசி  ஆவணப்படமானது 2 பாகங்களாக வெளியிடப்பட்டது. குஜராத் முதல்வராக மோடி  இருந்தபோது நடந்த இனக்கலவரத்தில் 800 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும், 300  பேர் மாயமானதாகவும் ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆவணப்படத்தை  மோடி தடை செய்ததோடு, பிபிசி அலுவலகத்தில் ரெய்டு நடத்தி உள்ளார். இந்த  கேவலமான ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டுமெனில் 2024ல் நடைபெற உள்ள  நாடாளுமன்றத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும்’ என்று தெரிவித்தார்….

The post ஒரு மாதத்தில் ஓபிஎஸ் கவர்னராகவும், இபிஎஸ் பாஜ தலைவராகவும் மாறுவார்கள் ஆடியோ, வீடியோவை வைத்து கட்சி நடத்தும் பாஜ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: