குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்தது சுற்றுலா பயணிகள் மீண்டும் உற்சாக குளியல்

தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்ததையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்தில் 265 தினங்கள் ஊரடங்கு தடைக்கு பிறகு கடந்த 15ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மூன்று தினங்களாக சுற்றுலா பயணிகள் குளித்து வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டு தினங்கள் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் பெயர், முகவரி, தொலை தொடர்பு எண் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஒரே சமயத்தில் 20 முதல் 30 நபர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு அனுமதிக்கப்படுகின்றவர்கள் ஐந்து முதல் பத்து நிமிடங்களில் வெளியேற்றப்பட்டு அடுத்த அணியினர் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை குற்றாலம் பேரூராட்சி பணியாளர்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: