தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஜனவரி 19-ல் ஆஜராக ரஜினிக்கு விசாரணை ஆணையம் 2-வது சம்மன்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஜனவரி 19-ம் தேதி ரஜினி விசாரணை ஆணையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பிப்ரவரி 25-ம் தேதி ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்தினர், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அரசு அதிகாரிகள், ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர், பத்திரிகையாளர்கள் என பல தரப்பு கருத்துகளை விசாரணை ஆணையம் கேட்டறிந்து வருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடிக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்று ஆறுதல் கூறியிருந்தார். அப்போது, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு சமூகவிரோதிகளின் ஊடுருவலே காரணம் என ரஜினிகாந்த் பேட்டி அளித்திருந்தார். ரஜினிகாந்தின் இந்த பேட்டி கடும் கண்டனத்துக்குள்ளானது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சமூக விரோதிகள் என ரஜினிகாந்த் விமர்சித்ததாகவும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும் விசாரணை ஆணையமானது ரஜினிகாந்தையும் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் ரஜினிகாந்துக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் அப்போது ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பின்னர் லாக்டவுன் காலம் அமலில் இருந்ததால் விசாரணை ஆணையமும் செயல்படாமல் இருந்தது. தற்போது 23-வது கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜனவரி 19-ந் தேதியன்று தூத்துக்குடியில் விசாரணை ஆணையம் முன்பாக ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இன்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

Related Stories: