முகக்கவசம் இல்லாமல் செல்பி!: சிலி அதிபர் செபாஸ்டியன் பினேராவுக்கு ரூ.2.60 லட்சம் அபராதம்..!!

சிலி: முகக்கவசம் இல்லாமல் செல்பி எடுத்த சிலி அதிபர் செபாஸ்டியன் பினேராவுக்கு இந்திய மதிப்பில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இம்முறையை மீறும் நபர்களுக்கு அபராதமும்,சிறை தண்டனை ஆகியவையும் விதிக்க முடியும். இந்நிலையில் சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா,  கச்சாகுவா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது அங்குள்ள இளம்பெண்ணுடன் செல்பி எடுத்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் முகக்கவசம் அணியவில்லை. இப்புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலி அதிபரே முகக்கவசம் அணியவில்லையா என பலரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இதனையடுத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அதிபர் செபாஸ்டியன் பினேராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறையை மீறியதற்காக அதிபர் செபாஸ்டியன் பினேரா மன்னிப்பு கோரியுள்ளார். தென் அமெரிக்க நாடான சிலி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 16 ஆயிரத்து 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related Stories: