கடத்தலில் இது வேறு மாதிரி கழுத்தை நெரித்து... வயிற்றைக் கிழித்து... தாயை கொன்று கர்ப்பப்பையில் இருந்த குழந்தை களவு: ஜனவரி 12ல் மரணத்தை தழுவ காத்திருக்கும் கைதி

சிகாகோ: கர்ப்பிணியைக் கொன்று, சிசுவைக் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது அமெரிக்க பெடரல் நீதிமன்றம். ஊரடங்கு காரணமாக நிலுவையில் இருந்த இந்த மரண தண்டனையை விரைவில் நிறைவேற்ற டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு, பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற 23 வயது கர்ப்பிணி தனது வீட்டில் இறந்து கிடந்தார். அந்த பெண்ணின் வயிறு கிழிக்கப்பட்டு, குழந்தை அகற்றப்பட்டிருந்தது. புதுவிதமான கொலை என்பதால் ஒன்றும் புரியாமல் விழித்தது போலீஸ். பிரேதப் பரிசோதனை அறிக்கை மேலும் தலை சுற்ற வைத்தது. ‘கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட பிறகே, ஸ்டின்னெட்டின் வயிறு கிழிக்கப்பட்டுள்ளது’ என்றார்கள் மருத்துவர்கள். எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் அறிவாளிகள் கூட, இதற்கு என்ன நோக்கம் இருக்க முடியும் என்று புரியாமல் குழம்பினார்கள். ‘ஒரு தேர்ந்த மருத்துவரின் அறிவுடன் வயிறு கிழிக்கப்பட்டிருப்பதால், குற்றவாளியின் நோக்கம் உயிருடன் சிசுவை அகற்றுவதாகவே இருக்க வேண்டும்’ என்று நிபுணர்கள் கூறினார்கள். எனவே, இது சிசுகடத்தலுக்கான கொலை என்று முடிவுக்கு வந்தது போலீஸ்.

தடயவியல் அறிக்கை மற்றும் கொலையான ஸ்டின்னெட்டின் இணையதள உரையாடலின் அடிப்படையில் லிசா மேரி என்ற பெண்ணை சந்தேகித்து கைது செய்தது போலீஸ். விசாரணையில் லிசா சொன்னதைக் கேட்டு வெலவெலத்துப் போனது போலீஸ். ‘எனக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இதனால் ஏதேனும் ஒரு குழந்தையைக் கடத்த முடிவு செய்தேன். நாய்களை விற்பனை செய்து வந்த ஸ்டின்னெட் பற்றி இணையதளம் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் நிறைமாத கர்ப்பிணி என்பது தெரிந்தது. எனவே, ‘எனக்கு ஒரு நாய்க்குட்டி வேண்டும்’ என்று கூறினேன். மிசவுரியில் உள்ள தனது வீட்டுக்கு வரச் சொன்னார். வீட்டில் யாரும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி ஸ்டின்னெட்டைக் கொன்று சிசுவைக் கடத்தி வந்தேன்’ என்று கூறினாள்.

அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் 16 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், லிசாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

‘குழந்தை கடத்தல் சம்பவத்தில் இது புது மாதிரியான சம்பவம். இந்த குற்றம் திடீரென்று உணர்ச்சி வசத்தால் நடத்தப்பட்டதல்ல. தெளிவாகத் திட்டமிடப்பட்டே நடந்திருக்க வேண்டும். மன்னிக்க முடியாத இந்த குற்றத்துக்கு டிசம்பர் 8ம் தேதி, 2020ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்படும்’ என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மரண தண்டனை, வரும் ஜனவரி 12ம் தேதி, 2021ம் ஆண்டில் நிறைவேற்றப்பட உள்ளது.

உயிர் பிழைத்த 13 குழந்தைகள்

குழந்தை கடத்தல் என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இதில் இன்னும் ஒருபடி மேலே போய் குரூரமாக யோசிப்பவர்கள் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையையே கடத்துகின்றனர்.  இதற்காக, அந்த கர்ப்பிணியை கொல்லவும் தயங்குவதில்லை. ‘இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 21 சிசு கடத்தல் நடந்திருக்கின்றன. அதில், 13 குழந்தைகள் உயிர் பிழைத்துள்ளன. இந்த எல்லா சம்பவங்களிலும் கர்ப்பிணிகள் கொல்லப்பட்டே, அவர்களின் வயிற்றில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன,’ என்கிறார் ஜான் ராபன் என்கிற ஆய்வாளர்.

1964ல் முதல் சம்பவம்

* அமெரிக்காவில் 1964ம் ஆண்டில்தான் இதுபோன்ற முதல் சிசு கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.

* 2004ம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற குழந்தைகள் கடத்தல் அதிகமாக நடந்துள்ளன.

* இதுவரையில் மட்டுமே அமெரிக்க போலீசால் 18 சிசுக்கள்  கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தந்தையிடம் ஸ்டின்னெட் குழந்தை

* லிசாவிடம் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட அந்த பெண் குழந்தை, ஸ்டின்னெட்டின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளது.

*  கடந்த 70 ஆண்டு பெடரல் நீதிமன்ற வரலாற்றில், இண்டியானாவில் உள்ள டெரே ஹட் சிறையில் விஷ ஊசி மூலம் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ள முதல் பெண் கைதி லிசா தான்.

Related Stories: