ராணுவம் எனக்கு கீழ் செயல்படுகிறது: பாக். பிரதமர் இம்ரான் காமெடி

* பாகிஸ்தான் வராலற்றில், அந்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த 74 ஆண்டுகளில், பாதி காலம் ராணுவமே அங்கு ஆட்சி நடத்தி உள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், ராணுவத்தின் உதவியுடன் கடந்த 2018ல்  பிரதமரானார். சிகிச்சைக்காக ஜாமீனில் இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரிப், `பாகிஸ்தானில் அரசியல், தேர்தலில் ராணுவம் மற்றும் உளவுப் பிரிவின் தலையீடு உள்ளது,’ என்று குற்றம்சாட்டி இருந்தார். இதனிடையே, பாகிஸ்தானில் 11 எதிர்க்கட்சிகள் இணைந்து, `பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்’ என்ற கூட்டணியை கடந்த செப்டம்பரில் உருவாக்கின. இவை கடந்த திங்களன்று லாகூர் பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ளன. இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி, பிரதமர் இம்ரான் கான் ராணுவத்தின் கைப்பாவையாக இருப்பதால், வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என கெடு விதித்துள்ளது.

இந்நிலையில், இதற்கு பதிலடியாக  இம்ரான் கான் நேற்று அளித்த பேட்டியில், ``ராணுவம் எனக்கு கீழ்தான் செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. மாறாக, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீட்டுக்கு அனுப்ப ராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றன. இது திட்டமிட்ட சதியாகும்,’’ என்றார். பாகிஸ்தானில் ராணுவமும், உளவுத்துறையான ஐஎஸ்ஐ.யும் வைத்ததுதான் சட்டம்.  தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும், யார் பிரதமர், அதிபர் பதவிகளை வகிக்க வேண்டும் என்பதையும் இவையே பின்னணியில் இருந்து முடிவு செய்கின்றன. இந்த உண்மை உலகறிந்தது. இந்நிலையில், ராணுவம் தனக்கு கீழ் செயல்படுவதாக இம்ரான் கான் கூறியிருப்பது, நகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: