டெல்டாவில் தொடர்ந்து மழை நீடிப்பு: 70 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது: உப்பு ஏற்றுமதி பாதிப்பு

திருச்சி: நிவர், புரெவி புயல் காரணமாக டெல்டாவில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக 3 லட்சம் ஏக்கருக்கும் மேல் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் அழுகி வீணானது. தமிழக  அரசால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மழை சேதத்தை பார்வையிட்டு, கணக்கெடுத்தது. இந்நிலையில் இரு வார இடைவெளிக்கு பிறகு டெல்டாவில் தொடர்ந்து 4 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தற்போது நாகை மாவட்டம் கொள்ளிடம், கீழ்வேளூர் பகுதியில் 55,000, தஞ்சை மாவட்டத்தில் 15,000,  திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் 200, புதுகை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் 320 என மொத்தம் 70,520 ஏக்கர் சம்பா, தாளடி, சோள பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கீழையூர்,  திருக்குவளை, வாழக்கரை போன்ற பகுதிகளில் கதிர் வந்த நிலையில் சம்பா நெற்பயிர்கள்  சாய்ந்துள்ளது. வேதாரண்யம் பகுதியை சேர்ந்த சுமார் 10,000 மீனவர்கள் நேற்று 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. அகஸ்தியன்பள்ளியில் உப்பு ஏற்றுமதியும் அடியோடு பாதிப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் குன்னம் அருகே காருகுடி கிராமத்தில் 10  ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பியுள்ளது.

Related Stories: