டார்ச் லைட் சின்னத்தை கேட்டு மக்கள் நீதி மய்யம் மீண்டும் முறையீடு: தலைமை ேதர்தல் ஆணையத்தில் மனு

புதுடெல்லி: ‘கடந்த மக்களவை தேர்தலில் ஒதுக்கிய டார்ச் லைட் சின்னத்தையே, 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் எங்கள்  கட்சிக்கு ஒதுக்க வேண்டும்,’ என தலைமை தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் மீண்டும் முறையீடு செய்துள்ளது.தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான பிரசாரத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில், கடந்த தேர்தல்களில் தங்களுக்கு அளிக்கப்பட்ட சின்னங்களையே 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் ஒதுக்க வேண்டும் என நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக ஆகியவை தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன. அது குறித்த அறிவிப்பை கடந்த 14ம் தேதி வெளியிட்ட தேர்தல் ஆணையம், மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னத்தை தமிழகத்தில் ஒதுக்க மறுத்து விட்டது.

ஆனால், புதுவையில் பயன்படுத்த அனுமதி அளித்தது. தமிழகத்தில் விஸ்வநாதன் என்பவர் நடத்தி வரும், ‘எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி’க்கு  டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம்  நேற்று அளித்துள்ள புதிய மனுவில்,  ‘மக்களவைத் தேர்தலில் ஒதுக்கிய டார்ச் லைட் சின்னத்தையே தமிழக சட்டப்பேரவை  தேர்தலிலும் எங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: