உள்ளாட்சி தேர்தல் மூலம் கோவாவில் கால் பதித்த ஆம்ஆத்மி: 2022 பேரவை தேர்தலுக்கு அடித்தளம்

பனாஜி: கோவாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இக்கட்சி 2022 பேரவை தேர்தலுக்கு அடித்தளம் அமைத்துள்ளது. கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஹென்சல் பெர்னாண்டஸ் (26) என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு ஏற்கனவே எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை. இவரது வெற்றியின் மூலம் கோவாவில் ஆம் ஆத்மி கால் பதித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஹெனசல் கூறுகையில், ‘எனது தந்தை ஒரு தச்சராக வேலை செய்கிறார். எனது தாயார் சுற்றுச்சூழல் ஆர்வலராக  உள்ளார். எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லாமல் இந்த தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் வெற்றி பெற்றேன்’  என்றார். இந்த வெற்றி குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘இது ஒரு ஆரம்பம் மட்டுமே’ என்று கூறினார். கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தை கூட வெல்லவில்லை. ஆனால், தற்போது ஒரு இடத்தில் வென்றுள்ளதால் 2022ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: