கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியில் வளர்ந்துள்ள ஆகாயதாமரைகள் மற்றும் நீர்த்தாவரங்களை அகற்ற நகராட்சி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலின் இதயம் போன்றது நட்சத்திர ஏரி. ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட இந்த ஏரி கொடைக்கானலின் அழகிற்கு மேலும் அழகினை சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏரியில் படகு சவாரி செய்வது, ஏரியை சுற்றி நடந்து செல்வது, குதிரை சவாரி செய்வது, சைக்கிள் சவாரி செய்வது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும்.

கொடைக்கானல் ஏரி தண்ணீர் பழனி நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கொடைக்கானலில் கீழ் மழை பகுதிகளைச் சேர்ந்த பெருமாள்மலை, பேத்துப்பாறை, அஞ்சு வீடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பாசனத்திற்கு இந்த ஏரி நீர் முக்கிய ஆதாரமாகவும் விளங்குகிறது. உரிய பராமரிப்பில்லாததால், 5 கிமீ சுற்றளவு கொண்ட இந்த ஏரி தற்போது பாழ்பட்டு, பொலிவிழந்து வருகிறது. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கபட்ட பின்னர், தற்போது சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி சில தினங்களுக்கு முன்பு இந்த ஏரியில் படகு சவாரியும் துவக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடைக்கானல் ஏரி முழுவதும் களைச்செடிகள், ஆகாயத்தாமரை, நீர்த்தாவரங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது  துப்புரவு பணியாளர்களை வைத்து களை செடிகளை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஒரு சில பணியாளர்களை வைத்து  ஒரு சில மணி நேரம் மட்டும் இந்த பணியை செய்வதால், முழுமையாக இப்பணி நிறைவு பெற பல மாதங்களாகும். அதற்குள் செடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் முளைக்க துவங்கும்.

எனவே ஏரியை தூய்மைப்படுத்தவும், ஏரியின் கரையோரங்களில் நிறைந்து காணப்படும் களைச்செடிகளையும் அகற்ற கொடைக்கானல் நகராட்சி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: