48 லட்சத்தை திருடியதாக கூறி விடிய, விடிய அடி உதை தம்பதியை வீட்டில் பூட்டி வைத்து சரமாரி தாக்கிய அதிமுக எம்எல்ஏ: தப்பி வந்து உசிலம்பட்டி காவல்நிலையத்தில் தஞ்சம்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியை சேர்ந்தவர் முருகன் (42). எலக்ட்ரீசியன். இவர் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ நீதிபதி வீட்டில், கடந்த சில வருடங்களாக எலக்ட்ரீசியன் சம்பந்தமான வேலைகளை செய்து வந்தார். முருகன் மீது நம்பிக்கை வைத்ததால் எம்எல்ஏ, தனது வீட்டிலுள்ள பணத்தை மொத்தமாக சூட்கேசில் கொடுத்து வைப்பதும், வாங்கிக் கொள்வதும் வழக்கம். சில தினங்களுக்கு முன்பு  எம்எல்ஏ நீதிபதி, சூட்கேசில் முருகனிடம் பணம் கொடுத்துள்ளார். அதனை தனது வீட்டில் முருகன் வைத்திருந்தார். நேற்று முன்தினம் எம்எல்ஏ பணத்தை எடுத்து வரச் சொன்னார். இதையடுத்து முருகன் சூட்கேசை கொண்டு வந்து கொடுத்தார். அதில் ரூ.48 லட்சம் குறைவாக இருந்ததாக கூறி முருகனை எம்எல்ஏ மிரட்டியுள்ளார். ஆனால் முருகன், ‘நான் பணம் எதையும் எடுக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த எம்எல்ஏ, நேற்று முன்தினம் இரவு முருகன் மற்றும் அவரது மனைவி சுகந்தி ஆகியோரை தனது வீட்டில் அடைத்து வைத்து விடிய, விடிய தாக்கியதாக கூறப்படுகிறது. அடி தாங்க முடியாமல்  முருகன் பணத்தை எடுத்ததாக  ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. எம்எல்ஏ நீதிபதியின் வீட்டிற்கு சென்ற தனது மகன் மற்றும் மருமகளை காணவில்லை என முருகனின் தந்தை ராமர் உசிலம்பட்டி நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனிடையே முருகன், சுகந்தி ஆகியோர் எம்எல்ஏவின் வீட்டில் இருந்து தப்பி நேற்று உசிலம்பட்டி நகர் காவல்நிலையம் வந்து சேர்ந்தனர். அங்கு முருகன் கூறுகையில், ‘‘எங்களை எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் விடிய, விடிய அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர். எனது மனைவியிடம் இருந்த 25 பவுன் நகைகளை பறித்துக் கொண்டனர். எனது பணத்தில் இருந்துதான் உன் வீட்டில் உள்ள நகையெல்லாம் வாங்கியிருக்கிறாய். எனவே உனது மனைவி நகை, மாமியார் நகையெல்லாம் ஒழுங்காக கொடுத்திடு. இல்லை கொலை செய்து விடுவோம் என மிரட்டினர்’’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Related Stories: