ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 2ம் நாள் சோதனையில் மேலும் ₹4 கோடி சிக்கியது: பல கோடி மதிப்பு ஆவணங்களும் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு தங்கபெருமாள் வீதியில் தனியார் கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக சீனிவாசன், சேகர், பூபதி ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு பஸ் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் உண்டு. மூத்த அமைச்சர் ஒருவர் இந்நிறுவனத்தின் இயக்குநருக்கு நெருங்கிய நண்பர் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிக்கான டெண்டர் பெற்றுள்ளனர். கர்நாடக மாநிலத்திலும் ஏராளமான அரசு கட்டிடங்களை டெண்டர் எடுத்துள்ளனர்.  இந்நிறுவனத்தினர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் காலை பல்வேறு குழுக்களாக பிரிந்து தங்கபெருமாள் வீதியில் உள்ள கட்டுமான நிறுவனம், பஸ் டிரான்ஸ்போர்ட், கஸ்பாபேட்டையில் உள்ள மசாலா நிறுவனம், முள்ளாம்பரப்பில் உள்ள திருமண மண்டபம், நிறுவன இயக்குநர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

நள்ளிரவு வரை நடந்த சோதனையில், ரூ.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று 2ம் நாளாக சோதனை நீடித்தது. இதில்,  கணக்கில் வராத ரூ.4 கோடி ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக வௌியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: