கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற குளிர்கால தொடர் ரத்து: ஜனவரியில் பட்ஜெட் தொடரை நடத்த திட்டம்

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை இந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்துள்ளது.   கொரோனா பாதிப்புக்கு இடையே சமூக இடைவெளியுடன் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 18 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இது, கொரோனா தொற்று காரணமாக 8 நாட்களில் முடிக்கப்பட்டது.  இந்நிலையில், விவசாயிகள் போராட்டம், வேளாண் சீர்திருத்த சட்டங்கள் பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை கூட்டும்படி, சில தினங்களுக்கு முன்காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்  சவுத்ரி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு  கடிதம் எழுதினார். இதற்கு கடந்த 14ம் தேதி ஜோஷி எழுதியுள்ள பதிலில், ‘டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் தற்போதைய ஆபத்தான சூழலில் நவம்பர்  இறுதி வாரம் தொடங்க வேண்டிய, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இந்தா்ண்டு நடைபெறாது.

கடுமையான குளிர் நிலவும் நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல. குளிர்கால கூட்டத்தொடர்  நடைபெற்றால் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, நடப்பாண்டு குளிர்கால கூட்டத் தொடரை நடத்தாமல் நேரடியாக ஜனவரி மாதம் பட்ஜெட் தொடரை முன்கூட்டியே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,’ என கூறியுள்ளார். 4வது முறை: நாடாளுமன்ற வரலாற்றில் 1975, 1979 மற்றும் 1984ம் ஆண்டுகளில் மட்டுமே குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. தற்போது, 4வது முறையாக இக்கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: