தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் மறுப்பு: டிடிவி தினகரனுக்கு குக்கர்; சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதேநேரத்தில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னமும், சீமான் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 4 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை இறுதிப்படுத்தும் வேலைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதனால் அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதில், நடிகர் கமலஹாசன் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

ஆனால் தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் டார்ச் லைட் சின்னம் இல்லை என்று அறிவித்துள்ளது. அவர் கேட்ட சின்னத்தை ஆவடியில் உள்ள ஒருவர் நடத்தி வரும் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தில் கமலின் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்ற கட்சியை டிடிவி தினகரன் தொடங்கினார். பின்னர் அவர் ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். பின்னர் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட்டது.

அப்போது, தனது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் விண்ணப்பம் செய்தார். ஆனால் சின்னம் ஒதுக்கீடு செய்ததில், முறைகேடு உள்ளதாக அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அப்போது அமமுக கட்சி தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் ஏற்கனவே நாங்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டதால் அதையே எங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் டிடிவி தினகரன் கட்சியான அமமுகவிற்கு அவர்கள் கேட்ட சின்னத்தை ஒதுக்கும் வரை சுயேட்சை வேட்பாளர்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் சின்னம் ஒதுக்க வேண்டாம் என உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழகம் மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் அமமுக கட்சி 40 தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட பரிசு பெட்டி என்ற பொது சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு முன்னதாக வழங்கப்பட்ட குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இரட்டை மெழுகு வர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டது. மக்களவை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இப்போது நடைபெறும் தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனது கட்சிக்கு டார்ச் லைட் ஒதுக்காததற்கு நடிகர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: