நட்பு கட்சியை கழற்றி விட்டு போடோலாந்தில் கூட்டணி ஆட்சியமைக்க பாஜ முயற்சி

கவுகாத்தி: போடோலாந்து பிராந்திய கவுன்சிலில் கூட்டணி ஆட்சியமைக்க பாஜ முயன்று வருகிறது. அசாம் மாநிலத்தில் தன்னாட்சி பெற்ற பிராந்திய பகுதியாக போடோலாந்து உள்ளது.  4 மாவட்டங்களில் 40 உறுப்பினர்களை கொண்ட இந்த பிராந்தியத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், போடோ மக்கள் முன்னணி 17,  ஐக்கிய மக்கள் கட்சி 12,  பாஜ 9,  காங்கிரஸ் - ஞான சுரக்ஷா கூட்டணி ஒரு இடத்தையும் பெற்றுள்ளன. எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, இங்கு கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜ கூட்டணியில் போடோ மக்கள் முன்னணி அங்கம் வகித்து வருகிறது.

ஆனால், பிராந்திய கவுன்சில் தேர்தலில் தனித்தனியே களம் கண்டன. அதனால், 12 இடங்களை பிடித்துள்ள ஐக்கிய மக்கள் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க பாஜ திட்டமிட்டுள்ளது. எங்களுக்கே ஆதரவு தர வேண்டும்: போடோ மக்கள் முன்னணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘2016ம் ஆண்டு முதல் பாஜ கூட்டணியில் இருக்கிறோம். இதுவரை எங்கள் கூட்டணி அதிகாரப்பூர்வமாகவே உள்ளது. அரசியலில் நிரந்தர எதிரிகளும், நண்பர்களும் இல்லை. எனவே, கூட்டணி கட்சி என்ற முறையில், எங்கள் கட்சி ஆட்சியமைக்கவே பாஜ ஆதரவு அளிக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: