திருப்பதி அருகே நடந்த சோதனையில் ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கைது

திருமலை: திருப்பதி அருகே நடந்த சோதனையில் ரூ.1 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை எஸ்பி ஆஞ்சனேயலு தலைமையில் ஆர்எஸ்ஐக்கள் வாசு, லிங்காதர் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கடத்தல் காரர்கள் செம்மரக்கட்டைகளை தோளில் சுமந்தபடி வந்தனர்.

ஆனால், போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் தோளில் இருந்த செம்மரக்கட்டைகளை ஆங்காங்கே கீழே வீசிவிட்டு தப்பியோடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடிக்க முயன்றனர். அதில், ஒருவர் பிடிபட்டார்.அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, அங்கிருந்த 49 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: