நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் மைய வளாகத்தில் நீரில் மூழ்கி அழுகும் 15 ஏக்கர் பயிர்கள்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் சாகுபடி செய்துள்ள இளம் பயிர்கள் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் 15 ஏக்கர் அழுகி வருகிறது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் நடவு செய்த இளம் நெற்பயிர்கள், தீவனப்பயிர்கள், பயிர் மாதிரிகள், புது ரக நெல் வகைகள், வரும் பருவ ஆண்டிற்கான ஆராய்ச்சி பயிர் வகைகள், மீன் குட்டை உள்ளிட்ட 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் நிவர் புயல் எதிரொலியால் பெய்த மழையில் அனைத்து பயிர் வகைகளும் நீரில் மூழ்கியது. அதனைத்தொடர்ந்து புரெவி புயலால் பெய்த தொடர்மழையில் 10 நாட்களாக வடிகால் வசதியில்லாமல் 15 ஏக்கர் சாகுபடி செய்துள்ள பயிர்கள் நீரில் மூழ்கி வயல்கள் குளம்போல் காட்சியளிக்கிறது.

\

நீடாமங்கலம் அருகில் உள்ள ஒரத்தூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் பெய்யும் மழைநீர் வேளாண்மை அறிவியல் நிலைய வளாக பின்புறமாக வடிகால் வாய்க்கால் வந்து அண்ணாசிலை அருகில் உள்ள மதகு வழியாக வந்து அங்கிருந்து சுமார் 300 மீட்டர் தூரம் வரை வந்து கோரையாற்றில் வடிகாலாக கலக்கிறது. ஆனால் அண்ணா சாலையிலிருந்து செல்லும் வடிகால் வாய்க்காலை அப்பகுதியில் உள்ள மக்கள் ஆக்கிரமிப்பு செய்து மேடாகியுள்ளது.இந்த வாய்க்கால் முறையாக தூர் வாராததால் ஒரத்தூர், திருவள்ளுவர் நகர்பகுதி, வேளாண்மை அறிவியல் நிலையம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொக்கலின் இயந்திரத்தை கொண்டு தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: